டில்லி கலவர வழக்கில் இமாமுக்கு வழங்கிய இடைக்கால ஜாமின் ரத்து
புதுடில்லி: டில்லி கலவர வழக்கில் சமூக ஆர்வலர் ஷர்ஜீல் இமாமுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, வடகிழக்கு டில்லியில், 2020ம் ஆண்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சமூக ஆர்வலர் ஷர்ஜீல் இமாம் என்பவர், உறவினர் திருமணத்தில் பங்கேற்க, 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்து இருந்தது.
இந்நிலையில், போலீஸ் தரப்பில், கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘வடகிழக்கு டில்லி கலவர வழக்கில் இடைக்கால ஜாமினில் வெளியே வந்த ஷர்ஜீல் இமாம், நீதிமன்ற நிபந்தனைகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். எனவே, அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சமீர் பாஜ்பாய் பிறப்பித்த உத்தரவு:
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது மற்றும் பத்திரிகையாளர்களுடன் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை, ஷர்ஜீல் இமாம் மீறியது போலீஸ் தரப்பில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களான, ‘யு ட்யூப்’ மற்றும் ‘எக்ஸ்’ இணைய தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களில், இமாமின் சகோதரரை ஒரு பத்திரிகையாளர் பேட்டி எடுத்த அதே அறையில் இமாம் அமர்ந்துள்ளார்.
அந்த வீடியோ தனித்தனி காட்சிகளின் தொகுப்பு என்றும், பேட்டி எடுத்த போது இமாம் அங்கு இல்லை என்றும் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தக் காட்சிகள், ஒரே அறையில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நிபந்தனைகளை மீறியதற்காக, இமாமுக்கு வழங்கிய ஜாமின் ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக சிறையில் சரண் அடைய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று மாலை சிறை அதிகாரிகளிடம் ஷர்ஜீல் இமாம் சரண் அடைந்தார்.