பிஎச்.டி., ஆய்வு வழிகாட்டி மீது ரூ.1 லட்சம் லஞ்சப் புகார்: விசாரணை நடத்த பல்கலை உத்தரவு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்லுாரியில் பிஎச்.டி., ஆய்வு மாணவி, ஆய்வுப் பணிக்கு ஒப்புதல் வழங்க ஆய்வு வழிகாட்டி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கல்லுாரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை விசாரித்து வருகிறது.
துாத்துக்குடியைச் சேர்ந்த ஆதித்யா, பெருமாள்புரத்தில் உள்ள சாராள் தக்கர் மகளிர் கல்லுாரியில் வணிகவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தனது ஆய்வு வழிகாட்டி பணம் கேட்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார். கல்லுாரி நிர்வாகத்திடமும் புகார் அளித்துள்ளார். அதை அறிந்து பல்கலை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து பல்கலை நிர்வாகத்திடம் கேட்டபோது, சாராள் தக்கர் மகளிர் கல்லுாரி முதல்வரிடம் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கல்லுாரியில் குழு அமைத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் முடிவுகளைப் பல்கலைக்கு தெரிவிப்பதாகக் முதல்வர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்கலை நிர்வாகம் தெரிவித்தது.