வறுமையில் வாடுகிறதா பொருளாதார குற்றப்பிரிவு? வராண்டாவில் மனுக்கள்; தரையில் அமரும் மக்கள்

கோவை: போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் தனியாக செயல்படும் அலுவலகம் பொருளாதார குற்றப்பிரிவு.

பொருளாதார மோசடிகள், முதலீடு மோசடி, நிலம் பறிப்பு போன்ற மோசடிகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள், தங்களது பணத்தை மீட்கும் நம்பிக்கையில் இந்த அலுவலகத்திற்கு வருகின்றனர். போன மாதம் மட்டும், 500 பேர் புகார் அளித்தனர்.

அங்கே அவர்கள் உட்கார கூட இடம் போதாது. வராண்டாவில் அமர்ந்தும், நின்றும் பெட்டிஷன் எழுத வேண்டும். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஏனென்றால் அதிகாரிகள் ஊழியர்களுக்கும் இடவசதி மிகவும் குறைவாக உள்ளது. 40 பேர் இருக்கிறார்கள். தனித்தனி அறைகள், டேபிள் சேர்கள் கிடையாது. பீரோ, கபோர்டுகள் வைத்தே இடம் பிரித்துள்ளனர்.

புகார்தாரர்களின் மனுவையும் ஆவணங்களையும் படித்து பார்ப்பது, புகார் தொடர்பான விவரங்களை கேட்டு குறிப்பது, பண பரிவர்த்தனைக்கு ஆதாரங்களை நகல் எடுப்பது, விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை வரிசைப்படி அடுக்குவது, குற்றவாளிகளின் சொத்து மதிப்பீடு விசாரணை என்று பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.

ஒரு உயர் அதிகாரியிடம் விசாரித்தோம். “கமிஷனர் ஆபீஸ் முழுதுமே இட நெருக்கடியில் தான் செயல்படுகிறது. பொருளாதார குற்றப்பிரிவு கமிஷனர் கட்டுப்பாட்டில் இல்லை. தனியாக செயல்படுகிறது. அதனால் அவர்களை நீங்களாவது பெரிய இடம் வசதியான இடம் பார்த்து போய்விடுங்கள் என்று இதுவரை வந்த ஒவ்வொரு கமிஷனரும் சொல்லி பார்த்து விட்டார்கள். பாவம், சென்னையில் உள்ள அதிகாரிகளுக்கு இந்த அவசரம் புரியவில்லை” என்றார். Latest Tamil News

Advertisement