இடம் பெயர்ந்த மரங்கள்: துளிர் விட்டதால் மகிழ்ச்சி

பல்லடம்: பல்லடத்தில் இருந்து இடம்பெயர்ந்த மரங்களில், இலைகள் துளிர்விட்டது, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு பல்லடத்தில், பெரிய விநாயகர் மாரியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் வளாகத்தில், நுாறு ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த, அரசு மற்றும் வேம்பு மரங்கள் வளர்ந்திருந்தன. கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், மரங்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சுல்தான்பேட்டை மரம் காப்பாளர் கனகராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மரங்கள் வேருடன் பெயர்த்து எடுத்து மறு நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. அகல் இயந்திரங்கள், கிரேன் உதவியுடன் மரங்கள் வேருடன் வெட்டப்பட்டு, லாரியில் ஏற்றி, பல்லடம் அடுத்த, சுல்தான்பேட்டை கொண்டு செல்லப்பட்டது.

சுல்தான்பேட்டையில், புதிதாக கட்டப்பட்டு வரும் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், மரங்கள் மறு நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. அக்., 2ம் தேதி கோவில் வளாகத்தில் இருந்த நான்கு மரங்களும் மறு நடவு செய்யப்பட்டன. இரண்டே வாரத்தில், மறு நடவு செய்யப்பட்ட நான்கு மரங்களிலும் இலைகள் துளிர்விட்டுள்ளன.

மரம் காவலர் கனகராஜ் கூறுகையில், ''ஒவ்வொரு மரங்களையும் நாங்கள் மறு நடவு செய்யும்போது, அவை வளர்வதற்கு உகந்த வகையில், தேவையான ஊட்டச்சத்துக்கள், உரங்களை இடுவோம். அவ்வகையில், பல்லடம் பெரிய விநாயகர் கோவில் வளாகத்தில் இருந்த நுாற்றாண்டு பழமையான மரங்கள் மறுநடவு செய்யப்பட்டு அவற்றுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதனையடுத்து, அவை துளிர் விட்டுள்ளன. இனி, அவை பசுமை குடையை விரிக்கும் என்பதில் ஐயமில்லை. குறுகிய காலகட்டத்தில் மரங்கள் துளிர்விட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது,'' என்றார்.

Advertisement