சொத்து வரியை செலுத்த ஓசூர் கமிஷனர் அறிவுறுத்தல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சொத்து உரிமையாளர்களும், மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய, 2026 - 27ம் ஆண்டிற்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை வரும், 31ம் தேதிக்குள் செலுத்தி, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், விதிகளின்படி, 5 சதவீத சலுகை பெற்று கொள்ளலாம். மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து சொத்து உரிமையாளர்களும், தங்களது வரியை காலதாமதமின்றி செலுத்துவதன் மூலம், அபராதம், கூடுதல் கட்டணங்களை தவிர்க்கலாம்.மாநகராட்சியின் குடிநீர் வழங்கல், சாலை பராமரிப்பு, கழிவு நீர் வடிகால், தெருவிளக்கு பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை பொதுச்சேவைகள் சிறப்பாக செயல்பட, வரியை செலுத்தி, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களது சொத்து வரியை, ஓசூர் மாநகராட்சி வரி வசூல் மையங்கள், நகர்ப்புற உள்ளாட்சி இணையதளமான, https://tnurbanepay.tn.gov.in மூலம், இணையவழியில் கட்டணங்களை எளிதாக செலுத்தலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement