இந்தியாவுக்கு இனிக்குமா இந்துார்: இன்று 3வது 'டி-20' மோதல்

இந்துார்: மூன்றாவது 'டி-20' போட்டியிலும் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இந்திய பவுலர்களுக்கு கடின சவால் காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெல்ல, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி இன்று, இந்துார் (ம.பி.,), ஹோல்கர் மைதானத்தில் நடக்க உள்ளது.
38.3 ஓவரில் 501 ரன்
இந்திய அணியின் 'பேட்டிங்' வலுவாக உள்ளது. சஞ்சு சாம்சன், அபிஷேக், முதல் போட்டியில் சதம் விளாசிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், கடைசி கட்ட அதிரடிக்கு திலக் வர்மா உள்ளனர். ஷிவம் துபேவுக்கு பதில் நிதிஷ் குமார் சேர்க்கப்படலாம். ராஞ்சியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா 249/5 ரன் குவித்தது. பின் கேப்டன் ஷாய் ஹோப் (102 ரன்), ரூதர்போர்டு (84) விளாசல் கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ், 18.3 ஓவரில் 'மெகா' இலக்கை எட்டி வென்றது. மொத்தம் 38.3 ஓவரில் 501 ரன் குவிக்கப்பட்டன. இதில் 382 ரன் பவுண்டரி (46), சிக்சர் (33) மூலம் கிடைத்தன.
ரன் மழை உறுதி
இன்று போட்டி நடக்கும் ஹோல்கர் மைதானமும் பேட்டிங் சொர்க்கபுரி. இதே மைதானத்தில் இந்திய அணி பங்கேற்ற கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் 399 (2023, எதிர்-ஆஸி.,), 385 ரன் (2023, நியூசி.,) குவித்துள்ளது. 2017ல் இலங்கைக்கு எதிரான 'டி-20' போட்டியில் இந்தியா 260 ரன் எடுத்தது. இதே மைதானத்தில் 2011ல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சேவக், 219 ரன் விளாச, இந்தியா 50 ஓவரில் 418/5 ரன் குவித்தது. இதனால் அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல் உள்ளிட்ட இந்திய பவுலர்களுக்கு இன்னொரு சோதனை காத்திருக்கிறது.
சபாஷ் ஹோப்
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் சந்தித்த தோல்வியில் இருந்து விரைவாக மீண்டது. இரண்டாவது சவாலில் அதிரடி 'பேட்டிங்' மூலம் சாதித்தது. இன்றும் ஹோப், ரூதர்போர்டு, ஷெப்பர்டு வாணவேடிக்கை காட்டலாம். கடந்த போட்டியின் வெற்றிக்கு 'ஸ்பின்னர்' ராஸ்டன் சேஸ் (3/24) முக்கிய காரணம். அகில் ஹூசைன், ஷெப்பர்டு கட்டுக்கோப்பாக பந்துவீசுவது பலம்.

யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 33 'டி-20' போட்டிகளில் மோதின. இந்தியா 21, வெஸ்ட் இண்டீஸ் 11ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை. இரவில் பனிப்பொழிவு தொல்லை தரலாம்.

ஆடுகளம் காரணமா...
இந்திய பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,''பேட், பந்து இடையே சமஅளவில் போட்டி இருக்க வேண்டும். சிக்சர், பவுண்டரி மட்டும் விளாசினால் போதாது. பவுலர்களும் நமது வீரர்கள் தான். வரும் போட்டிகளில் சிறந்த ஆடுகளம் அமைக்கப்பட வேண்டும். ராஞ்சி தோல்விக்கு ஆடுகளத்தை குறை சொல்லி தப்பிக்க விரும்பவில்லை.
ரூதர்போர்டு கொடுத்த 'கேட்ச்சை' மயங்க் யாதவ் நழுவவிட்டதை விமர்சிக்கின்றனர். கிரிக்கெட்டில் 'கேட்ச்' தவறவிடுவது சகஜம். அணியில், துவக்க வீரர்கள் இடம் மட்டுமே நிரந்தரம். மற்ற பேட்டர்களின் இடம் தேவைக்கு ஏற்ப மாற்றப்படும். முன்பு 4வது இடத்தில் களமிறங்கி ஷிவம் துபே சாதித்திருக்கிறார். ராஞ்சி போட்டியில் இவரால் சோபிக்க முடியவில்லை. நான் யாரையும் குறை கூறவில்லை. வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஆபத்தான அணியை கட்டுப்படுத்தும் வழியை கண்டறிய வேண்டும்,''என்றார்.

சேவக் ஆதரவு
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவக் கூறுகையில்,''வைபவ் சூர்யவன்ஷி நல்ல 'பார்மில்' உள்ளார். என்னை போலவே முதல் பந்தில் இருந்து விளாசுகிறார். இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும். 37 வயதில் கோலி விளையாடுகிறார். 15 வயதில் வைபவும் விளையாடலாம். வீரர்களின் வயது முக்கியமல்ல. செயல்பாடு தான் முக்கியம்,''என்றார்.

Advertisement