உழந்தை ஏரி கரைகளை பலப்படுத்த கோரிக்கை

உழந்தை ஏரியில் துார்வாரும் பணியில் அகற்றப்படும் மண்ணை கொண்டு கரைகளை பலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரும்பார்த்தபுரம் பைபாசில் இருந்து வேல்ராம்பட்டு செல்லும் பகுதியில் உள்ள உழந்தை ஏரியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசனப் பிரிவு சார்பில், துார்வாரும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

அதில், 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுக்கப்பட்டு, லாரிகள் மூலம் வெளிப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழைக் காலங்களில் தண்ணீரை கூடுதலாக சேமிக்கவும், ஏரியின் நீர்ப்பிடிப்பு திறனை மேம்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதி முழுவதையும் துார் வாருவதுடன், ஏரிக்கரைகளையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஏரியில் இருந்து துார்வாரும் போது அகற்றப்படும் மண்ணை கொண்டே, அந்த ஏரியின் கரைகளை உயர்த்தி மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

ஏரிக்கரைகளை சுற்றிலும் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை நட அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement