கடலுாரில் இரு பெண்களிடம் 10 சவரன் செயின் பறிப்பு

கடலுார்: கடலுார், உப்பலவாடியை சேர்ந்தவர் சுப்புராயன் மனைவி பழனிமுத்து, 52; இவர், நேற்றிரவு 8:30 மணிக்கு கடலுார் மஞ்சக்குப்பம் மணிகூண்டில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

கருமாரபேட்டை வளைவு அருகே சென்றபோது, பின்னால் ெஹல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பழனிமுத்து கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலிச் செயினை பறித்தனர். திடுக்கிட்ட பழனிமுத்து கூச்சலிடவே, அக்கம் பக்கத் தினர் ஓடி வருவதற்குள், மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

அந்த மர்ம நபர்கள், அடுத்த சில நிமிடங்களில் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெரு வழியாக நடந்து சென்ற அருந்ததி நகரை சேர்ந்த ஆனந்த் மனைவி குமுதம், 43; அணிந்திருந்த 4 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

கடலுாரில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் செயின் பறித்த சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி., தமிழ் இனியன், புதுநகர் இன்ஸ்பெக்டர் இளவரசி நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement