அ.தி.மு.க., வில் பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி அணி ஆட்டம் மீண்டும் ஆரம்பம்; இடைத்தேர்தலில் தோல்வி எதிரொலி
சென்னை: இடைத்தேர்தலில் படுதோல்வியை, அ.தி.மு.க., சந்தித்த நிலையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளிடம், அதிருப்தி அணியினர் மீண்டும் பேச்சு நடத்தி வருகின்றனர்.
சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., 47 தொகுதிகளில் மட்டுமே வென்ற நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாக மாறியது.
மூன்றாம் இடம்:
அதன் தொடர்ச்சியாக, வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க., அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். பின்னர், அவர்களில் 6 பேர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்தனர்.
அதைத்தொடர்ந்து, தனக்கு எதிராக செயல்பட்டவர்களின், கட்சி பதவிகளை பழனிசாமி பறித்தார். பின், அவர்களுக்கு மாவட்ட செயலர் பதவியை தவிர்த்து, வேறு பதவிகளை வழங்கினார். எனினும், அதிருப்தி அணியினர் அமைதியாகவே இருந்தனர்.
இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில், மூன்றாம் இடத்துக்கு அ.தி.மு.க., சென்றது. பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற, அவ்விரு தொகுதிகளிலும், ஆறே மாதத்தில், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு, படுதோல்வியடைந்தது, கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதை பயன்படுத்திக்கொள்ள, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிருப்தி அணியினர் முடிவு செய்து, பழனிசாமிக்கு எதிராக காய் நகர்த்தலை தொடங்கி உள்ளனர்.
அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வின் பலம் என்ன என்பதை அறியவே, வேலுமணி தரப்பினர் அமைதியாக இருந்தனர். தற்போது, இடைத்தேர்தலில் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. இதனால், 'நாமும் த.வெ.க.,வுக்கு தாவலாமா' என, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் சிலர் நினைக்கின்றனர்.
அந்த மனநிலையில் உள்ள, 6 பேரிடம் த.வெ.க., பேச்சு நடத்துகிறது. அவர்கள், த.வெ.க.,வுக்கு தாவுவதால், அதிருப்தி அணிக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியில், வேலுமணி இறங்கி உள்ளார்.
ரகசிய ஆலோசனை
மேலும், த.வெ.க.,வுக்கு தாவும் மனநிலையில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களிடமும், பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடமும் பேச்சு தொடங்கி உள்ளது. சென்னையில், முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில், கட்சி சீனியர்கள் பலரும் பங்கேற்ற ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
அதில், 'பழனிசாமி, செயற்குழுவை கூட்டி, கட்சியை தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் முன், நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்தடுத்த நாட்களில், பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அதிருப்தி அணிக்கு மாற்ற, தீவிர முயற்சி நடக்கிறது. இவ்வாறு, அவ்வட்டாரங்கள் கூறின.