நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு

கரூர்,:நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா, கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் மற்றும் வீடுகளில் கொலு படிகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் களைகட்டியுள்ளன.

தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்டிய, சக்தியின் வடிவமாக விளங்கும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை போற்றும் நவராத்திரி உற்சவம், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் முக்கிய அம்சமாக வீடுகளிலும் கோவில்களிலும், 3, 5, 7, 9 என ஒற்றைப்படை எண்ணிக்கையிலான படிகள் அமைத்து, அதில் மரப்பாச்சி பொம்மை, தசாவதாரம், அஷ்டலட்சுமி செட் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் மற்றும் இதிகாச காட்சிகளை சித்தரிக்கும் பொம்மைகளை, வரிசையாக அடுக்கி வைத்து வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் கொலு வைத்து வழிபடும் பொதுமக்கள், இதற்கான ஆயத்த பணிகளை முன்கூட்டியே தொடங்கினர். சிலர் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மூன்று நாட்களுக்கு முன்பே படிகள் அமைத்து பொம்மைகளை அலங்கரிக்க துவங்கினர். மேலும் பலர், மஹாளய அமாவாசையான நேற்று வீடுகளில் கலசம் வைத்து, கொலு வைத்தனர்.

நவராத்திரியின் 9 நாட்களும் மாலை வேளையில் வீடுகளில் நெய்தீபம் ஏற்றி, பெண்கள் மற்றும் குழந்தைகள் கூடி லலிதா சகஸ்ரநாமம், தேவி மகாத்மியம் மற்றும் பக்தி பாடல்களைப் பாடி, சுண்டல் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபாடு நடத்துவர். மேலும் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் மற்றும் பிரசாதம் வழங்கி மகிழ்வர்.

Advertisement