3வது டி-20 கிரிக்கெட்: சிறப்பான பவுலிங்; இந்தியா வெற்றி
இந்தூர்: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த 3 வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே இந்திய துவக்க வீரர் சஞ்சு சாம்சன் (3) சொற்ப ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் சிக்சர் மழை பொழிந்தனர். 8வது ஓவரிலேயே இந்தியா 100 ரன்னை கடந்தது.
18 பந்தில் அபிஷேக் ஷர்மா அரைசதம் விளாசினார். மறுமுனையில் இஷான் கிஷான் 37 ரன்னில் விக்கெட் இழந்தார். கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா 30 பந்தில் 69 ரன்னுக்கு ( 4s -6, 6s - 5) ஆட்டமிழந்தார். அதன்பிறகு, திலக் வர்மா (28), நிதிஷ் ரெட்டி (21), அக்ஷர் படேல் (20) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 223 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரையில் சேஸ், ஷமர் ஜோசப், ஷ்பிரிங்கர் தலா 2 விக்கெட்டையும், கீமோ பால், மோட்டி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அபிஷேக் ஷர்மாவின் சாதனைகள்
* ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவின் (68) சாதனையை சமன் செய்தார். 2வது இடத்திலும் அபிஷேக் சர்மா தான் இருக்கிறார் 2025ல் 54 சிக்சர் அடித்துள்ளார்.
* வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில், வார்னர், கோலின் முன்ரோ (18 பந்து) ஆகியோருடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டார். முதல் இரு இடங்களில் டிகாக் (15), டிம் டேவிட் (16) உள்ளனர்.
* 20க்கும் குறைவான பந்தை சந்தித்த 8 முறை அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரையில் ஒரு சில வீரர்கள் 3 முறை மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.
* குறைந்த பந்தை சந்தித்து (1024 பந்து) அதிவேகமாக 2000 ரன் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு, பூரன்,ஹெட்மையர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். பூரன் 42 ரன்னிலும், ஹெட்மையர் 43 ரன்னிலும் நமன்தீர் பந்தில் அடுத்தடுத்து அவுட்டாகினர். ரோவ்மன் பவுலும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த 105 ரன்னுக்கு முக்கிய 4 விக்கெட்டை இழந்தது.
இதனையடுத்து வந்த ரூதர்போர்டு, 32 ரன், சாம்ப்சன் 21 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆக, கிமோ பால் 10 ரன்னில் வெ ளியேறினார். ஸ்பிரிங்கர் 35 ரன், ராஸ்டன் சாஸ் 5 ரன்னும் சேர்த்த போதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 209 ரன்னுக்குள் சுருண்டது. இந்நிலையில் இந்திய அணி 14 ரன்னில் வெற்றி பெ ற்றது. 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணியில் உள்ளது.