தலைநகரில் அமைதியை சீர்குலைக்கும் சமூக வலைதள பதிவுகள்; "செக்' வைக்கும் டில்லி போலீஸ்



டில்லி: பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படும் சமூக வலைதளங்களை டில்லி போலீஸ் கண்காணித்து வருகிறது.

தலைநகர் டில்லியில் அண்மைக்காலமாக எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தலைமை தேர்தல் கமிஷனரின் பதவி நீக்கத்தை கோரி,எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணியினர் போராட்டம் டில்லி வாழ் மக்களுக்கு பெரும் நெருக்கடியாகவே மாறியிருக்கிறது எனலாம்.

இதனால், போராட்டம் நடத்த ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்டு வந்த ஜந்தர் மந்தர் இடத்திற்கான அனுமதியை உள்துறை அமைச்சகம் நீக்கி உள்ளது. வேறு 3 புதிய இடங்களை போராட்டங்களுக்கானது என்றும் அறிவித்து இருக்கிறது.

இடத்தை மாற்றிவிட்டதாக தெரிவித்துவிட்டாலும், போராட்டங்களின் போது போலீசாரின் நடவடிக்கைகளை விமர்சித்து போலியான பதிவுகள் வெளியாகலாம். ஏற்கனவே பெண் பத்திரிகையாளரை போலீஸ் அதிகாரி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற போலியான காணொளி பரவியதால் அதை தடுக்க டில்லி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட போலியான, தவறான தகவல்களை பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்ட பதிவுகளை டில்லி போலீசார் நீக்கி உள்ளனர். வதந்திகள் பரவுவதையோ, பொது அமைதியை கெடுக்கும் விதத்திலோ இப்படியான பதிவுகள் உள்ளதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுத்துள்ளதாக டில்லி போலீஸ் கூறி உள்ளது.

தொடர்ந்து போலியான காணொளிகள், பதற்றத்தை உருவாக்கும் வகையிலான தகவல்களை வெளியிடும் உள்ளடக்கங்களை கண்டறியும் முயற்சியிலும் டில்லி போலீஸ் இறங்கி இருக்கிறது.

Advertisement