பயிர்க்கடன் தள்ளுபடியில் அதிருப்தி: விவசாய பணி மேற்கொள்ள தயக்கம்
திருப்புவனம்: தமிழக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடிக்கான நிபந்தனைகளால் விவசாயிகள் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையை நம்பி 4 ஆயிரம் எக்டேரில் நெல் நடவு செய்யப்படுகிறது. செப்டம்பர் முதல் அக்டோபர் கடைசி வரை நடவு பணிகள் நடைபெறும் . ஏக்கருக்கு 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர். பெரும்பாலும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறுவது வழக்கம். முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் குறைந்த வட்டியில் மீண்டும் கடன் வழங்கும்.
2025 மே முதல் 2026 பிப்ரவரி 28 வரை கடன் பெற்ற 14 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் நலிவுற்ற நாடக கலைஞர்கள், முதியோர் ஒய்வூதியம் பெறும் விவசாயிகள் உள்ளிட்டோர்களுக்கு பயிர் கடன் தள்ளுபடி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் தாலுகாவில் அரசின் மாதம்தோறும் ஓய்வூதியம் பெறும் நாடக கலைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். நாடக சீசன் தவிர மற்ற நாட்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் விவசாயம் செய்வது வழக்கம். இவர்களுக்கு இந்தாண்டு கடன் தள்ளுபடி இல்லை என அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசின் முடிவால் இந்தாண்டு விவசாய பணிகளை நாடக கலைஞர்கள், ஓய்வூதியம் பெறும் விவசாயிகள் தொடங்கவே இல்லை.
மத்திய, மாநில அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்பது சரி, நலிவுற்ற நாடக கலைஞர்களையும் அதில் வகைப்படுத்துவது என்ன நியாயம் என புலம்புகின்றனர்.
முல்லை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் எல்.ஆதிமூலம் கூறுகையில்,
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு பயிர்க்கடன் தள்ளுபடிக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. உதவி தொகை பெறும் நாடக கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பயிர்கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு சங்கத்திற்கு சென்ற போது தான் பலருக்கும் தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் கடந்தாண்டு ஒன்றரை லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் நடந்தது. இந்தாண்டு எல்நினோ தாக்கம் காரணமாக விவசாயம் குறைந்து வரும் நிலையில் பயிர்கடன் நிபந்தனைகளால் சாகுபடி பரப்பளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது, என்றார்.
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்