ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் கேட்கும் விவசாயிகள்

பெங்களூரு: பெங்களூரின் சுதந்திர பூங்காவில் விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று போராட்டம் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

விவசாய தலைவர்கள் பேசியதாவது:

கர்நாடகாவின் 217 தாலுகாக்களில், வறட்சி நிலவுகிறது. 30 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பகுதிகளில், விளைச்சல் சேதமடைந்தது. அதிகரிக்கும் விவசாய செலவு, மின் பற்றாக்குறை, கடன் சுமையால் அவதிப்படும் விவசாயிகள், தங்களின் வாழ்க்கையை காப்பாற்ற போராடுகின்றனர்.

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம், பிச்சை போன்று வழங்க கூடாது. அவர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து தாலுகாக்களிலும் விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும். பயிரிடுவதற்காக விவசாயிகள் செய்த செலவு வீணாகி விட்டது. விளைச்சல் பாழானதால் கடனை அடைக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகரிக்கிறது.

வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

தனியார் நிதி நிறுவனங்கள், விவசாயிகளிடம் கடனை வசூலிப்பதை, இரண்டு ஆண்டுகள் நிறுத்த வேண்டும். ஒரு டன் கரும்புக்கு 4,500 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தை போன்று, 800 ரூபாய் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

Advertisement