குளத்தில் இருந்து மைதானமான ராம்லீலா: போராட்டம் நடத்த ரூ.1.21 லட்சம் கட்டணம்: அப்படி என்ன ஸ்பெஷல்?

புதுடில்லி: டில்லியின் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.1.21 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அடுத்த இரண்டரை மாதங்களில் முன்பதிவு செய்ய 3 நாட்கள் மட்டுமே தற்போது உள்ளன.

தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்தர் இனி அங்கீகரிக்கப்பட்ட போராட்டக்களமாக இருக்காது என்று காவல்துறை அறிவித்து இருக்கிறது. அதற்கு மாற்றாக, ராம்லீலா மைதானம், புராரி மைதானம், கிழக்கு டில்லியில் சிபிடி மைதானம் ஆகியவற்றை போராட்டக்களங்களாக அறிவித்துள்ளது.

இந்த 3 போராட்டக்களங்களில் வடக்கு டில்லியில் அமைந்துள்ள ராம்லீலா மைதானம், ஜந்தர் மந்தரில் இருந்து 4 கிமீ தொலைவில் இருக்கிறது. புராரி மைதானம் 21 கிமீ தொலைவில் உள்ளது. கிழக்கு டில்லியின் சிபிடி மைதானம், 13 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அறிவிக்கப்பட்டு உள்ள போராட்டக்களங்களில் ராம்லீலா மைதானம், போராட்டம் நடத்த அதிக செலவுமிக்கது. இங்கு போராட்டம் நடத்த வேண்டும் என்றால் ரூ.50,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான பாதுகாப்பு வைப்புத்தொகையாக செலுத்தப்படும் ரூ.55,000ஐ அதை செலுத்துவோர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

வரிகள் உள்ளிட்ட மற்ற கட்டணங்களுடன் சேர்த்து முன்புதிவுக்கான ஆரம்பக் கட்டணம் என்பது ஒரு நாளைக்கு ரூ.1.21 லட்சம். இந்த மைதானத்தை பயன்பாட்டுக்கு அனுமதிக்கும், டில்லி மாநகராட்சியின் தோட்டக்கலை துறை மூலமாகவே முன்பதிவு செய்துகொள்ள முடியும். இதற்கான தடையில்லா சான்றிதழை போலீசிடம் இருந்து பெற வேண்டும்.

ராம்லீலா மைதானத்தில் சிறிய பகுதியை மட்டும் போராட்டங்கள், கூட்டங்கள் போன்றவற்றிற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 150 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என்கிறது டில்லி மாநகராட்சி. அடுத்து வரக்கூடிய நாட்களில் தசரா, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதால், இங்கு பல்வேறு நிகழ்ச்கிகள், விழாக்களுக்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

தற்போது இந்த ஆண்டில் 3 நாட்கள் மட்டுமே காலியாக உள்ளன. அதாவது, டிச.29, 30 மற்றும் 31 தேதிகள் மட்டுமே காலியாக உள்ளன. மற்ற நாட்களில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

ராம்லீலா மைதானம் 1930ம் ஆண்டு வரை குளமாக இருந்துள்ளது. பின்னர் ராம்லீலா நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக மண் நிரப்பி சமன் செய்யப்பட்டு, மைதானத்தின் பெயரே ராம்லீலாவாக மாறிப்போனது.

1932ம் ஆண்டு முதல் போராட்டங்கள், நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வருகின்றன. 1952ம் ஆண்டு ஜம்முகாஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க சியாமாபிரசாத் முகர்ஜி இந்த மைதானத்தில் தான் போராட்டத்தை தொடங்கினார். 1956-57ல் முன்னாள் பிரதமர் நேரு இங்கு பொதுக்கூட்டங்கள் நடத்தி உரையாற்றினார்.

2ம் எலிசபெத் ராணியின் இந்திய பயணத்தின் போது அவரை கவுரவிக்கும் வகையில் ஒரு பொது நிகழ்ச்சி ராம்லீலாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தான் இங்கு ஒரு நிரந்தர மேடை அமைக்கப்பட்டது. 1971ம் ஆண்டு பாக்.கிற்கு எதிரான போரில் வென்றதை தொடர்ந்து அப்போதிருந்த பிரதமர் இந்திரா, இங்குதான் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

1974ம் ஆண்டு நவ.26ல் சோவியத் தலைவர் பிரெஷ்னோவை கவுரவிக்க பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. 1975ம் ஆண்டு ஜூன் 25ல் எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்ட நாளில் ஜெயபிரகாஷ் நாராயணனும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் இங்கு நடத்தப்பட்ட பேரணியில் உரையாற்றினர். இதே மைதானத்தில் தான் அர்விந்த் கெஜ்ரிவால் 2013, 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் முதல்வராக பொறுப்பேற்றார்.

பல்வேறு தளங்களில் சிறப்புகளை பெற்ற இந்த ராம்லீலா மைதானத்தில் இந்தாண்டு போராட்டம் நடத்த 3 நாட்கள் மட்டுமே காலியாக இருக்கின்றன. டிச.29, 30 மற்றும் 31 தேதிகள் மற்ற நாட்களில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன என்பது தான் சுவாரசியம்.

Advertisement