‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
சாரத்தில் ஏறி மிக உயரமான கட்டடங்களிலும், ‘பெயின்ட்’ அடிக்கும் வேலை செய்து வரும், 40 வயதாகும் அமுதா:
எனக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம், தப்பகுட்டை கிராமம். திருமணம் முடித்து, இளம்பிள்ளை ஊருக்கு வந்து விட்டோம். கணவர் தறிக்கு வார்ப்பு போடும் வேலை செய்கிறார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால், கணவரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது.
அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம், ‘ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க’ என்று சொல்லி வைத்திருந்தேன். பக்கத்து வீட்டில் இருந்த அக்கா, ‘தினமும் 100 ரூபா சம்பளம், சுண்ணாம்பு அடிக்க வர்றியா’ன்னு கேட்டாங்க; ‘சரி’ன்னு சொல்லி விட்டேன்.
ஆரம்பத்தில், வீட்டுக்குள் மட்டும் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றபோது, சூட்டால் உடல் முழுக்க கட்டிகள் வந்தன. அதனால், பெயின்ட் அடிக்கும் வேலைக்கு மாறினேன். வெளிப்புறத்தில் பெயின்ட் அடிக்கும் ஆண் பணியாளர் ஒரு நாள் வரவில்லை. வேறு வழியின்றி சாரத்தில் ஏறி, அந்த வேலையை முடித்து கொடுத்தேன்.
‘பொம்பளை புள்ளை சாரத்தில் எல்லாம் ஏறி வேலை செய்யலாமா?’ என்று, ஆரம்பத்தில் கேட்க தான் செய்தனர். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால் செய்யலாம். மிகவும் சிரமமான வேலை இது. பெயின்ட் கண்ணில் தெறிக்கும்; எரிச்சல் இருக்கும். கையெல்லாம் காயங்கள் ஏற்படும்.
சாரத்தில் ஏறும்போது கஷ்டமாக இருக்கும்; கீழே பார்த்தால் தலை சுற்றும். புடவையுடன் சாரத்தில் ஏறி, இறங்குவதும் கஷ்டம் தான். எல்லாரும், ‘பேன்ட் போட்டுக் கொள்’ என்று கூறுவர்; எனக்கு தயக்கமாக இருக்கிறது.
என், 20 வயதில் செய்த மாதிரி இப்போது வேலை செய்ய முடியவில்லை. ஆனாலும், இந்த வேலை பிடித்திருக்கிறது. தினமும் சாரத்தில் ஏறுவதும், இறங்குவதும் சாகசம் மாதிரி இருக்கும்.
ஒருநாள் வேலை செய்தால், 800 ரூபாய் சம்பளம் கிடைக்கும். இந்த வருமானத்தில் தான் இரு மகள்களையும் கல்லுாரி வரை படிக்க வைத்தேன். இப்போது பெரிய மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன். சில நாட்களுக்கு முன் நான் சாரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்ததை எங்கள் முதலாளி காணொளி எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதை அனைவரும் பார்த்திருக்கின்றனர்.
இப்போது எங்கு சென்றாலும், ‘பெயின்ட் அடிக்கிற அக்கா தானே நீங்க’ என்று கேட்கின்றனர். என் மருமகன் கூட, அந்த காணொளியை பார்த்து விட்டு, ‘அத்தை நீங்க மாஸ்’ என்று கூறினார். என்ன மாஸோ... நமக்கு நம்ம வேலை சாமி மாதிரி; அதை விரும்பி செய்கிறோம். அவ்வளவு தான்! உடம்பில் சக்தி இருக்கும் வரை இந்த வேலையை செய்வேன்.
சிங்கப் பெண் நீங்கள் ,அதிலும் தமிழ் சிங்கப்பெண்.தொடரட்டும் உங்களது முயற்சி. வாழ்த்துக்கள்.மேலும்
-
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
-
மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
-
தினமலர் எதிரொலி கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
-
560 கிலோ பட்டாசு பறிமுதல்
-
பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்