இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா

2

ரியாத்: இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர் அனோஜன் சிவராசா, வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். அங்கு சமூக வலைதளத்தில் இலங்கையைச் சேர்ந்தவரின் பதிவுக்கு மத நிந்தனை செய்யும் விதமாக, கமென்ட் போட்டதாக சிவராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்தது.

மரண தண்டனையை ரத்து செய்வதற்காக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதன் பலனாக, இலங்கை தமிழர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியா உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

அவரது பேஸ்புக் பதிவு; அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியா உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்துள்ளது. இலங்கை அரசின் தொடர்ச்சியான தூதரக மற்றும் சட்டப்பூர்வமாக முயற்சியின் மூலம் இந்த நிவாரணம் கிடைத்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த சவுதி அரேபியா அரசு, இலங்கை தூதரகம், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளின் செயல்களை பாராட்டுகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

Advertisement