ரூ.35க்கு மின்சாரம் கொள்முதல் ஏன்; அமைச்சர் நிர்மல்குமார் சொல்வது இதுதான்

சென்னை: ரூ.35க்கு வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் கோரப்பட்டு உள்ளது ஏன் என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது பேட்டி;

மத்திய தொகுப்பில் மின்சாரம் இல்லை. அதனால் வெளியில் ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மின்சாரத்தின் தேவை இப்போது அதிகரித்துள்ளது.

கடந்த மாதத்தில் இருந்து என்எல்சியில் இருந்து நமக்கு வரவேண்டிய 1880 மெகாவாட் மின்சாரம் வரவில்லை. காற்றாலை மூலமாகவும் 3500 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும், ஆனால் 500 மெகாவாட் மின்சாரம் தான் வருகிறது, 3000 மெகாவாட் மின்சாரம் வரவில்லை. காற்றின் வேகம் குறைந்தது தான் காரணம்.

நாம் ஏற்கனவே வாங்கி கொண்டிருந்த மெகாவாட்டில் இருந்து 4850 மெகாவாட் நமக்கு வரவில்லை. கடந்த ஆண்டை பார்க்கும் போது நமது மின்தேவை உயர்ந்துள்ளது, நமக்கு வரவேண்டிய மின்சாரமும் குறைந்திருக்கிறது. வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழகத்தின் மின் தேவை அதிகமாக உள்ளது.

எனவே இதை சரிசெய்யவே, இப்போது நாம் மின்சாரத்தை வெளியிடத்தில் கொள்முதல் செய்கிறோம். இதை செய்யாவிட்டால் மற்ற மாநிலங்களை போல நாமும் மின்தடைக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும். 2 அல்லது 3 மணிநேரம் மின்தடை ஏற்படும் சூழல் உருவாகும். அதற்காக தான் இந்த கொள்முதலை செய்கிறோம்.

ஒப்பந்தத்தின்படி 3500 மெகாவாட் அறிவித்து இருந்தாலும் வாங்கப்போவது என்னவோ 1500 மெகாவாட் மட்டுமே. அக்.31ம் தேதி வரை 16 நாட்களுக்கு பீக் ஹவர்சுக்கு மட்டுமே தான் இதை பயன்படுத்த போகிறோம். இது இல்லாமல் தீபாவளி காலங்களில் அந்த 3 நாட்களில் மட்டும் தனியாக சில ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் நீண்ட கால ஒப்பந்தங்கள் எதுவும் போடப்படவில்லை. அதனால் தான் நாம் குறுகிய கால ஒப்பந்தங்களை போட வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த மாதத்திலேயே நீண்ட கால ஒப்பந்த அறிவிப்புகளை வெளியிட இருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

Advertisement