வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாவட்டத்தில் 2,334 பேர் விண்ணப்பம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில், 2,334 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். எஸ்.ஐ.ஆர்., பணிகள் முடிந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி, தமிழகத்தில் சட்டசபை தொகுதிகள் வாரியாக கடந்த 10ம் தேதி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடந்தது.

கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) என, மொத்தம் 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள 2,590 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், 18 வயது முதல், 19 வயது வரையிலான ஆண்கள், 20வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என, மொத்தம் 1,249 பேரும், 18 வயது முதல், 19 வரையிலான பெண்கள், 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என, 1,083 பேரும், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 2,334 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர்.

மொத்தம் 2: . இதில், அதிகபட்சமாக சிதம்பரத்தில் 365 பேரும், குறைந்த பட்சமாக நெய்வேலியில் 190 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அதே போன்று, பெயர் நீக்கம் செய்ய 66 பேரும், முகவரி மாற்றம், திருத்தம் செய்யக் கோரி 243 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாமில், அந்தந்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்காளர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர்.
Latest Tamil News
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி கூறுகையில், 'கடந்த 10ம் தேதி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்ய கோரி மொத்தம் 2,643 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்யப்பட்டன. புதிய வாக்காளர் அட்டை தபால் மூலமாக வாக்காளர்களின் வீடுகளுக்கு ஒரு மாதத்தில் அனுப்பி வைக்கப்படும்' என்றார்.

Advertisement