ஜி.எஸ்.டி., வரி மோசடியில் தொழிலதிபருக்கு ‘5 ஆண்டு’
கோவை: ஜி.எஸ்.டி., வரி, 12.82 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தொழில் அதிபர் வடிவேல் ஜெயச்சந்திரன், 50, என்பவருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, காந்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் ஜெயச்சந்திரன். இவர் மற்றும் மனைவி பெயரில், அரவிந்த் டிரேடர்ஸ், லட்சுமி டிரேடர்ஸ் ஆகிய நிறுவனம் நடத்தினார். இந்நிறுவனம் வாயிலாக கொப்பரை, தேங்காய், பருத்தி கழிவு, மரம் ஆகிய வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், 2017– 2022ம் ஆண்டில், 191 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளதாக கணக்கு காட்டி இருந்தார். இதன் வாயிலாக, அரசிடமிருந்து, 12.82 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரி வரவை பெற்றிருந்தார்.
இவரது ஜி.எஸ்.டி., கணக்கு, மற்றும் வங்கி கணக்கை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, 17.34 கோடி ரூபாய்க்கு மொத்த விற்பனை செய்துவிட்டு, 191 கோடி என, போலி பில் தயாரித்தது தெரிந்தது. இரண்டு நிறுவனங்கள் பெயரில் போலி பில்கள், ஆவணங்கள் தயார் செய்து, 12.82 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி பெற்று, அரசை ஏமாற்றியது தெரியவந்தது.
கோவை ரேஸ்கோர்ஸ் ஜி.எஸ்.டி., அதிகாரிகள், வடிவேல் ஜெயச்சந்திரன் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். கோவை சி.ஜே.எம்., கோர்ட்டில் வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமார், வடிவேல் ஜெயச்சந்திரனுக்கு, 5 ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.