ஆன்லைன் ‘டிரேடிங்’ பயிற்சி மோசடி ரூ.6 கோடி சுருட்டிய நண்பர்கள் கைது
ஆவடி: ‘ஆன்லைன் டிரேடிங்’ பயிற்சி அளிப்பதாக, தலா ஒருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் 6 கோடி ரூபாய் மோசடி செய்த, 24 வயது கல்லுாரி நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கவின் பிரசாத், 24, கீர்த்திவாசன், 24, மற்றும் பார்த்திபன், 24. நண்பரான இவர்கள், பள்ளி முதல் எம்.பி.ஏ., வரை ஒன்றாக படித்தவர்கள்.
இவர்கள், 2022ல் திருவேற்காடில் வீட்டை வாடகைக்கு எடுத்து டிரேடிங் குறித்து வகுப்பு எடுத்து சம்பாதித்துள்ளனர். தொடர்ந்து ‘இன்ஸ்டா’ சமூக வலைதளத்தில் 40 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில், ‘டிரேடிங்’ குறித்து கற்றுத் தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.
பேட்ச் ஒன்றிற்கு 40 முதல் 50 பேரை சேர்த்து, கோவளம், முட்டுக்காடு, கொடைக்கானல், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ரிசார்ட்டை மொத்தமாக ஏழு நாட்கள் வாடகைக்கு எடுத்து, ஒரு அறைக்கு 10 பேர் வீதம் தங்க வைத்து, ‘ஆன்லைன்’ டிரேடிங் கற்றுக்கொடுத்துள்ளனர்.
ஆர்.பி.ஐ.,யால் தடை செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சிகளால் முதலீடு செய்ய வைத்துள்ளனர். ஒரு பேட்ச்சிற்கு 16 லட்சம் ரூபாய் என, 36 பேட்ச்சுக்கு 6 கோடி ரூபாய் வசூலித்து, சட்டவிரோதமாக முதலீடு செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
மேலும், பயிற்சி எடுக்க வந்த மாணவர்களை, அதிக லாபம் அடைந்தது போல் நடிக்க வைத்து வீடியோ எடுத்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார் மூவரையும் நேற்று கைது செய்தனர்.