பொங்கலுக்கு தரமான இலவச வேஷ்டி சேலை: கோவையில் அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி

கோவை: ‘‘பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலை தரமானதாக இருக்கும்,’’ என, அமைச்சர் விஜய் பாலாஜி கூறினார்.

மத்திய அரசு ஜவுளி நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் நவராத்திரி, தீபாவளி கைத்தறி உற்சவம், கண்காட்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கோல்டுவின்சில் ராமலட்சுமி கல்யாண மண்டபத்தில் நேற்று துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் கண்காட்சியை தமிழக கைத்தறி ஜவுளி மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பவன் குமார் கிரியப்பனார் தலைமை வைத்தார்.

கண்காட்சியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளர், கூட்டுறவு அமைப்புகள், கைத்தறி உற்பத்தியாளர்கள் பங்கேற்ற 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை அனைத்து கைத்தறி ரகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சி பட்டு, போச்சம்பள்ளி, படோலா, பைத்தானி, பனாரஸ், போன்காய் வங்க பருத்தி சேலைகள், பாரம்பரிய சேலைகள் தரை விரிப்புகள் ஆடை துணி வகைகள் இடம் பெற்றுள்ளன.

தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்தில் 24 கைத்தறி நெசவாளர்களுக்கு 90 சதவீத மானியத்தில் நெசவுக் கருவிகள், ஒரு எலக்ட்ரானிக் ஜக்கார்டு கருவியும், 23 மோட்டார் இயக்க ஜக்கார்டு லிப்ட் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

நெசவாளர் நலத்திட்டத்தில் விருது பெற்ற நெசவாளர்களுக்கு மாதம் ரூ.8,000 ஓய்வூதியத்துக்கான சான்றுகள் வழங்கப்பட்டன.

அமைச்சர் விஜய் பாலாஜி கூறுகையில், ‘‘கைத்தறி நெசவாளர்களின் கூலி உயர்வு குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க தேர்தலின் போது வாக்குறுதி அளித்துள்ளோம். முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரும் பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் எவ்வித ஊழலுக்கும் இடமின்றி, அரசு ஒதுக்கிய நிதியில் தரமான துணிகளாக வழங்கப்படும்,’’ என்றார்.

Advertisement