சேக்காடில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு: மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு

சென்னை: கூவம் கரையில் கழிவுகளை கொட்டியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்தை மதிப்பீடு செய்து இழப்பீட்டை வசூலிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆவடி அடுத்த சேக்காடு கிராமத்தில் ஓடும் கூவம் கரையில், உள்ளாட்சி அமைப்பால் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, ராஜா மணி என்பவர், ஆவடி மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, வல்லுனர் குழு உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வதற்கான வசதிகளை அமைக்க, ஆவடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

சேக்காடு கிராமத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதம் குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பீடு செய்யலாம். இதற்கான அபராத தொகையை, தனி வங்கி கணக்கு தொடங்கி அதில் வசூலிக்கலாம்.

திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து, 2026 டிச., முதல், 2027 டிச., இறுதி வரை, காலாண்டு வாரியான அறிக்கையை, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement