பாக்., எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி: இந்திய ராணுவம் உஷார்

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) 6 முதல் 7 ஊடுருவல் முகாம்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் முன்னணிப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகரித்து மலைப்பாதைகள் மூடப்படுவதற்கு முன்பாக, இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் நடைபெறலாம் எனக் கருதப்படுவதால், ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பூஞ்சில் கண்ணிவெடியில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!



பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காடி பகுதியில், எல்லையைக் கடக்க முயன்ற நான்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பழைய கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த தளபதியான முகமது ஃபைசானும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மெந்தர் பகுதியில் இரண்டு பழைய கண்ணிவெடிகள் கண்டறியப்பட்டு ராணுவத்தினரால் அழிக்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் அப்பகுதியில் சுமார் 12 கண்ணிவெடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க இந்திய ராணுவம் உஷார் நிலையில் உள்ளது.

Advertisement