தசராவை முன்னிட்டு டில்லியில் உருவான 221 அடி உயர ராவணன் பொம்மை

1

புதுடில்லி: டில்லியின் துவாரகா பகுதியில் இந்த ஆண்டு தசரா கொண்டாட்டத்தின் போது 221 அடி உயர ராவணன் உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட உள்ளது. உலகிலேயே மிக உயரமான ராவணன் உருவ பொம்மை இதுவாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டில்லியின் துவாரகா செக்டர் 10 பகுதியில் உள்ள ஸ்ரீ ராம்லீலா சொசைட்டி சார்பில் இந்த பிரம்மாண்ட உருவ பொம்மை அமைக்கப் பட்டுள்ளது. இதனுடன் 90 அடி உயரத்தில் மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் உருவ பொம்மைகளும் இடம்பெற உள்ளன.

தசரா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இந்த மூன்று உருவ பொம்மைகளும் தீயிட்டு எரிக்கப்பட உள்ளன. இதைக் காண ஏராளமான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

3 மாத உழைப்பு; 120 கலைஞர்கள் பங்களிப்பு!



இந்த பிரம்மாண்ட ராவணன் உருவ பொம்மையை உருவாக்க மூன்று மாதங்கள் ஆனதாக துவாரகா ஸ்ரீ ராம்லீலா சொசைட்டியின் தலைவர் ஆகாஷ் ராஜேஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.

சண்டிகரைச் சேர்ந்த கலைஞர்கள் உள்ளிட்ட சுமார் 120 கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். உருவ பொம்மையை உருவாக்க சுமார் 7 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

221 அடி உயரமுள்ள உருவ பொம்மை உறுதியாக நிற்பதற்காக, தரையில் 10 அடி ஆழத்தில் குழி தோண்டி அடித்தளம் அமைக்கப் பட்டுள்ளது. அதன் ஆடை நீர் புகாத வெல்வெட் துணியால் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கிரீடம் மட்டுமே 25 அடி உயரம் கொண்டது.

ரூ.40 லட்சம் செலவில் பிரம்மாண்ட உருவாக்கம்!



இந்த ராவணன் உருவ பொம்மையை உருவாக்க சுமார் ரூ.40 லட்சம் செலவிடப் பட்டுள்ளது. இதன் கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்கள் மற்றும் கலைஞர்களின் உழைப்புக்காக இந்தத் தொகை செலவிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் தீ வைக்க ஏற்பாடு!



இந்த ஆண்டு ராவணன் உருவ பொம்மையைத் தீயிட்டு எரிக்கும் நிகழ்விலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. வழக்கமாக நேரடியாகத் தீ வைப்பதற்குப் பதிலாக, ரிமோட் கண்ட்ரோல் கருவி மூலம் உருவ பொம்மை தீப்பற்றச் செய்யப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிகழ்ச்சியின்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

221 அடி உயர ராவணன், அதன் அருகே 90 அடி உயர மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் உருவ பொம்மைகள் என இந்த ஆண்டு துவாரகா தசரா கொண்டாட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement