ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம் :மாநகராட்சி மீது மக்கள் புகார்
கடலுார்: கடலுாரில் ஆக்கிரமிப்பில் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் பெயரளவில் மீட்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கும் அபாயம் உள்ளது. கடலுார்-சிதம்பரம் சாலையில் பிரபல துணிக்கடை மற்றும் ஜூவல்லரி இடையே சூரப்பநாயக்கன் சாவடியில் இருந்து கெடிலம் ஆற்று வரையிலான மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் உத்தரவின்படி, கடந்த 9ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலமாக 16 அடி அகலமான வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆனால், அதிகாரிகள் முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்றாமல் பெயரளவில் மட்டுமே அகற்றியதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், ஆக்கிரமிப்பை சரியாக அகற்றாததால் வண்டிப்பாளையம், கடலுார் பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாயக்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.