ஈரோடு மாநகரில் வெளுத்து வாங்கிய கனமழை வழக்கம்போல் குளமான வீரப்பன்சத்திரம்
ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்றும் வெயிலின் தாக்கம் வழக்கம்போலவே சுட்டெரித்தது. மழை வந்து வெப்பத்தின் தாக்கத்தை போக்காதா என மக்கள் எதிர்பார்த்த நிலையில், மாலை, 5:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டமாக மாறியது. மழைக்கு முன்னோட்டமாக குளிர்காற்றும் வீசியது.
இதனால் சூழல் சற்றே இதமாக மாறியது. ஈரோடுவாசிகளுக்கு இது நம்மூர்தானா? என்ற சந்தேகமும் முளைத்தது. அதேசமயம் வானத்தில் மழைக்கான முஸ்தீபுகள் நிகழ்ந்தபடியே இருந்தன. இதன் எதிரொலியாக இரவு, 7:00 மணிக்கு கனமழை கொட்ட தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் சாய் ஹோப் போல், ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்க தொடங்கியது. இதனால் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் போல், மக்களும், வாகன ஓட்டிகளும் பதுங்கி, பம்ம வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒருவழியாக, 8:15 மணிக்கு பிறகு அதுவாகவே வேகம் குறைந்தது. அதன் பிறகும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக துாறலும், சாரலுமாக பெய்தது.
குளமான சாலைகள்
கனமழையால் வழக்கம்போல் மீனாட்சி சுந்தரனார் சாலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, காளைமாட்டுசிலை உள்ளிட்ட பல்வேறு பகுதி சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். வீரப்பன்சத்திரம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்ததால், வழக்கம்போல் குளமாக மாறியது. சாலையோர வியாபாரிகள் மட்டுமின்றி, நடந்து சென்றோர், டூவீலரில் பயணித்தோர் அவதிக்கு ஆளாகினர். பல டூவீலர்கள் தண்ணீருக்குள் மூழ்கி சைலன்சருக்குள் தண்ணீர் புகுந்ததால் ஆப் ஆகின. வாகன ஓட்டிகள் பலமுறை உதைத்தும் வழிக்கு வராததால், தள்ளிக்கொண்டு புலம்பியபடி சென்றனர்.
மின்தடை
மழையால் எஸ்.கே.சி.ரோடு, ஈ.வி.என்.ரோடு, பெரியண்ணா வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வீடுகளில் புகுந்த மழைநீர்...
ஆட்சி மாறியும் காட்சி மாறல
கொட்டித்தீர்த்த கனமழையால் வீரப்பன்சத்திரம் பெரியகுட்டை வீதியில், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அப்பகுதியில் ஒரு மருத்துவமனை, மருந்துக்கடை, மளிகை கடை உள்பட பல கடைகளில் வெள்ள நீர் புகுந்தது. குடியிருப்புவாசிகள், ஊழியர்கள் மழை நீரை பாத்திரங்களில் முகந்து வெளியில் ஊற்றினர். சத்தி ரோடு விரிவாக்கப்பணிக்கு பிறகு இப்பகுதி சாலை மட்டத்தை விட உயரம் குறைந்து விட்டது. இதனால் மழை காலங்களில் இப்பகுதி வீடு, கடைகளில் வெள்ள நீர் புகுவது வழக்கமாகி விட்டது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் பயனில்லை என்பது மக்களின் குமுறலாக உள்ளது. ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை என்றும் மக்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும்
-
பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம்
-
ஆலோனைக்கூட்டம்
-
இதயத்திற்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறையை பின்பற்றுவது அவசியம்: டாக்டர் ஜவஹர் ப்ருக் அறிவுரை
-
சிவகங்கை மாவட்டத்தில் அக்.,20 முதல் 31 வரை தடை: கலெக்டர் ஆகாஷ் உத்தரவு
-
சிவகாசி காரனேசன் விலக்கில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
-
பெண் விவசாயிகள் தின விழா