பிரெஞ்சு மொழி கல்வி பரிமாற்றத்தில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்குநரகம், பிரெஞ்சு மொழிக் கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புதுச்சேரி அரசுக்கும், பிரான்சுக்கும் இடையே கல்விப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி, டூமாஸ் தெரு பென்சியோனாட் டி ஜியூன்ஸ் பில்ஸ் வளாகத்தில் நடந்த விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கான பிரான்ஸ் துாதர் டாக்டர் தியரி மாத்து, கவர்னரின் தனி செயலர் மணிகண்டன் ஆகியோர் கையெழுத்திட்டனர். பள்ளிக்கல்வி இயக்குநர் மோகன்குமார் நன்றி கூறினார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பிரெஞ்சு மொழி கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதையும், அதன் மூலம் புதுச்சேரிக்கும், பிரான்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதுச்சேரி மாணவர்களிடையே கல்வி உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிரெஞ்சு மொழி கற்றலை ஊக்குவிப்பதற்கும் இது முக்கியப் படியாக அமைந்தது.

Advertisement