நகை மோசடியில் கூட்டுறவு சங்க செயலருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் உட்பட 4 பேர் கைது
துாத்துக்குடி: கூட்டுறவு சங்கத்தில் நடந்த நகை மோசடி சம்பவத்தில் செயலருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2019 முதல் 21 வரையில் அடமானம் வைக்கப்பட்ட 300 சவரன் நகைகள், டிபாசிட் தொகை என மொத்தம் 29 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது தெரியவந்தது.
வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கூட்டுறவு கடன் சங்க செயலர் தேவராஜ், உதவி செயலர் ஜான்சி சந்திரகாந்தா ஞானபாய், தலைவர் முருகேசப்பாண்டியன், எழுத்தர் சிவகாமி, நகை மதிப்பீட்டாளர் ஆறுமுகநயினார் ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், மோசடி செய்யப்பட்ட நகைகள் செயலர் தேவராஜ் ஏற்பாட்டில் பல்வேறு நபர்கள் மூலம் வேறு வங்கிகளில் மறு அடமானம் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தேவராஜின் கார் டிரைவர் ஆறுமுகநேரி மடத்துவிளையை சேர்ந்த முத்துச்சாமி, 47, அவரது மனைவி கிருபா, 44, எலக்ட்ரீசியனாக வேலை செய்த வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரத்தை சேர்ந்த முருகன், 62, இசக்கிதுரை, 33, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் பெயரில் மறு அடமானம் வைக்கப்பட்ட நகைகளை மீட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.