லாட்ஜ் ஊழியரை கொன்று புதைத்த சித்துார் பெண் உட்பட மூவர் கைது

வேலுார்: கே.வி.குப்பம் அருகே, லாட்ஜ் ஊழியரை கொன்று புதைத்த வழக்கில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலுார் மாவட்டம், காட்பாடி திருப்பாக்குட்டையை சேர்ந்தவர் தேவராஜ், 30. இவர் காகிதப்பட்டறையில் உள்ள தனியார் லாட்ஜில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நதியா, 28.

கடந்த 9 ம் தேதி தேவராஜ் மாயமானார். அவரது மனைவி புகாரில், வேலுார் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து கேமரா காட்சிகளின் அடிப்படையில் மாயமான தேவராஜை தேடினர். அப்போது, அவரை கே.வி.குப்பம் அடுத்த கீழ் விலாச்சூரை சேர்ந்த யாசின், 38, என்பவர் தன் காரில் அழைத்து சென்றதும், பின் மதுபோதையில் அவரை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்ததும் தெரியவந்தது.

போலீசார் யாசின், உமர், 28, உட்பட மூவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் கொலை செய்து புதைத்த இடத்தில், கே.வி.குப்பம் தாசில்தார் சித்ரா முன்னிலையில், தோண்டப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது.

இந்நிலையில், நேற்று கொணவட்டத்தை சேர்ந்த அமீது, 46, தாருகேஷ், 24, சித்துாரை சேர்ந்த பாலியல் தரகர் தேஜா, 23, ஆகிய மூவரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

யாசின் பாலியல் தொழில் புரோக்கராக உள்ளார். அவருடன் தேவராஜ் வேலை செய்துள்ளார். அப்போது, புரோக்கர் தேஜா ஸ்ரீ என்ற பெண்ணிடம் 2 லட்சம் ரூபாயை தேவராஜ் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை தேவராஜ் திருப்பித்தரவில்லை.

அதனால் தேஜாஸ்ரீ, யாசினை தொடர்பு கொண்டு தேவராஜ் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை எனக் கூறியுள்ளார். யாசினும், உமரும், தேவராஜை காரில் ஏற்றிக் கொண்டு கே.வி.குப்பம் அருகே மேல் விலாச்சூர் பகுதியில் உள்ள உமர் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆடு வெட்டும் கத்தியை எடுத்து தேவராஜின் கழுத்தில் வெட்டியுள்ளனர். அதில், தேவராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின், யாசின் வீட்டுக்கு பின்னால் உள்ள காலியிடத்தில், குழி தோண்டி தேவராஜின் உடலை புதைத்துள்ளனர். இதுதொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement