உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லை: வீ த லீடர்ஸ் அண்ணாமலை உறுதி

2

கோவை: ''எப்போது உள்ளாட்சி தேர்தல் வந்தாலும், வீ த லீடர்ஸ் போட்டியிடும். யாருடனும் கூட்டணி இல்லை,'' என வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை கூறினார்.

வீ த லீடர்ஸ் அமைப்பின் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அறம், அரசியல், மையம் துவக்க விழா, கோவை நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி., ஐடெக் அரங்கில் நடந்தது.

நிகழ்ச்சியில் வீ த லீடர்ஸ் தலைமை செயல் அதிகாரி பிரபாகரன் வரவேற்றார். ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமசாமி, அப்துல் கலாம் குடும்ப உறுப்பினர் ஷேக் சலீம், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாலதி, நேதாஜி படையில் இருந்த 108 வயதான லெப்டினன்ட் மாதவன் ஆகியோர் பேசினார்.

மேடையில் அப்துல் கலாம் பங்கேற்ற நிகழ்வுகளை விளக்கும் வகையில் 100 கிலோ எடையுள்ள துணியால் நெய்யப்பட்ட புத்தகம் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் வீ த லீடர்ஸ் அண்ணாமலை பேசுகையில், ''ஏதோ ஒரு இடத்தில், மரக்கன்று, துாய்மை பணி என பல்வேறு நிகழ்வுகளை செய்து கொண்டுள்ளனர். 14 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். மாற்றங்களை ஏற்படுத்த, கலாமின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் குடும்பத்தினர் அனுமதியோடு இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 21 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இது ஒரு புரட்சிகரமான திட்டமாக இருக்கும். 2027 அக்டோபரில் தரமிக்க ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளித்திருப்போம்.

ஏழு வாரம் தொடர்ந்து வைகை நதி, பழனி சண்முக நதி, தாமிரபரணியை தூய்மை செய்து வருகிறோம். ஓராண்டுக்குள் 175 கி.மீ., நதியை துாய்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது துவங்கியுள்ள மையத்தில் முதல்கட்டமாக 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
Latest Tamil News

பணம் இல்லா தேர்தல்



அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் எப்போது உள்ளாட்சி தேர்தல் வந்தாலும், வீ த லீடர்ஸ் போட்டியிடும். அடிப்படை மாற்றம் என்பது உள்ளாட்சியிலிருந்து சட்டசபை தேர்தல் வரைக்கும் வரும். அரசியல் கட்சியாக இல்லாவிட்டாலும், அமைப்பாக போட்டியிடுவோம். யாருடனும் கூட்டணி இல்லை.

வயது வித்தியாசமின்றி, அரசியல் அனுபவமில்லாதவர்கள் வரை அனைவருக்கும் பயிற்சி அளிக்கிறோம். தலைமை பண்புடன், அரசியலிலும், அதிகாரத்திலும் உள்ள அனைத்திலும் இந்த பயிற்சி இருக்கும். அடிப்படை தலைவர்களை உருவாக்குவோம்.

தமிழ்நாட்டில் மரபுசாரா உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தாலும், காற்றலை, சூரிய மின்சாரத்தை சேமித்து பயன்படுத்த மின்வாரியம் பேட்டரி கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை. அரசுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை. பழைய கதைகளை நஷ்டம் என்று சொல்லாமல், திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஓராண்டுக்கு பின் ஆட்சியை பற்றி பேசுவேன்.

விஜய் வருகையால் போக்குவரத்து சிரமங்கள் மக்களுக்கு ஏற்படுகிறது. பாதுகாப்பை எளிமைப்படுத்த முதல்வர் தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பணம் இல்லாத இடைத்தேர்தலை முதல் முறையாக தாராபுரம், மதுராந்தகத்தில் பார்க்க முடிந்தது. போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement