ஒட்டன்சத்திரம் வழித்தட ரயில்களில் தேவை கூடுதல் பெட்டிகள்! : பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசல் தவிர்க்க வேண்டும்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணம் வசதியாகவும், பஸ் கட்டணத்தை விட குறைவாகவும் இருப்பதால் பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது ரயில் பயணத்தை தான். குடும்பத்துடன் பயணிக்க ஏற்றதாக உள்ளதால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால் தேவைக்கேற்ப ரயில்களின் எண்ணிக்கை இல்லை. சாதாரண நாட்களிலேயே முன்பதிவு செய்யப் போனால் காத்திருப்போர் பட்டியல் தான் இருக்கிறது. பண்டிகை, விசேஷ நாட்களில் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் நெரிசல் அதிகமாக இருக்கிறது. தீபாவளி, பொங்கலுக்கு முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் புக்கிங் செய்யப்பட்டு விடுகிறது.

ஸ்லீப்பர் கோச்சுகளில் முன்பதிவு செய்து டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியல் இருநுாறுக்கு மேல் சென்று விடுகிறது. இவர்கள் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பது அரிதாகி வருகிறது. தட்கல் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருந்த போதிலும் காத்திருப்போர் பட்டியலும் அதிகமாக உள்ளது.

சென்னையில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக பாலக்காடுக்கு இயக்கப்படும் அதிவேக விரைவு ரயிலில் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் தான் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் கிடைக்கிறது.

பண்டிகை நாட்களை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கினாலும் முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் தீர்ந்து விடுகிறது. இதனால் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாகி நெரிசலில் தவிக்கும் நிலை உள்ளது.

எனவே ரயில் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் பொதுப்பெட்டி, துாங்கும் வசதி கொண்ட பெட்டிகளை கூடுதலாக இணைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement