வழிந்தோடும் கழிவுநீரால் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், தாமல்வார் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக, ஒரு வாரமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருவதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்துள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், தாமல்வார் தெரு வழியாக கோனேரிகுப்பம், ஏனாத்துார், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.
இத்தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, ஒரு வாரமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், சாலையில் வழிந்தோடும் கழிவுநீரில், வாகனங்கள் வேகமாக கடந்து செல்லும்போது, சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது கழிவுநீர் தெளிக்கிறது.
தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி வருவதால், சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, தாமல்வார் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து, சேதமான சாலையை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘தாமல்வார் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்