திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
திருப்பூர்: வெளியூர்களில் இருந்து வந்து இறங்குவோர் ஒருபுறம்; சொந்த ஊருக்குப் புறப்படக் காத்திருப்போர் மறுபுறம். பின்னலாடைத் தொழில் தரும் வேலைவாய்ப்புகள், திருப்பூரை நோக்கி மக்களைத் தொடர்ந்து ஈர்க்கின்றன. இதன் எதிரொலியாக, திருப்பூர் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை ஒரே நாளில் 27 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
கொரோனாவுக்கு முன்பு, தினமும் 18 ஆயிரம் முதல் 21 ஆயிரம் பேர் வரை பயன்படுத்திய ரயில் நிலையத்தில், பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை 23 ஆயிரம் வரை உயரும். 2024–25ம் ஆண்டுகளில் 24 ஆயிரம் முதல் 25 ஆயிரமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த அக். 11 நள்ளிரவு 12:01 மணி முதல் அக். 12 நள்ளிரவு 12:01 மணி வரையிலான 24 மணி நேரத்தில், 27 ஆயிரம் பயணிகள் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். இதில், இரண்டாவது நடைமேடையை மட்டும் 13 ஆயிரம் பேர் பயன்படுத்தியுள்ளனர். பகலில் 38 ரயில்களும், இரவில் 45 ரயில்களும் கடந்து செல்வதால், இரவு நேரத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து வருவதும் பயணிகள் எண்ணிக்கை உயர்வுக்குக் காரணம் என ரயில் நிலைய முன்பதிவு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயுத பூஜை தொடர் விடுமுறை, தீபாவளி நெருங்குவதால் கூட்டம் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு நடைமேடைகளிலும் தலா ஆறு பேர் சுழற்சி முறையில் கண்காணிக்கின்றனர்.
வேலை தேடி வருவோர், பண்டிகைக்காக ஊர் திரும்புவோர், தினசரி பயணம் மேற்கொள்வோர் எனப் பலரின் பாதைகள் சந்திக்கும் இடமாகத் திருப்பூர் ரயில் நிலையம் மாறியுள்ளது. பயணிகள் எண்ணிக்கை உயர்வது நகரின் தொழில் வளர்ச்சியைப் பிரதிபலித்தாலும், அதிகரிக்கும் கூட்டத்துக்கு ஏற்ப நடைமேடை வசதிகள், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டிய தேவையையும் உணர்த்துகிறது.
மேலும்
-
மனதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்!
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு எதிராக களமிறங்கிய 'லால் ஹிட்'
-
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் ஓ.ஐ.சி., தீர்மானம்; நிராகரித்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்
-
தொடரும் சைபர் தாக்குதல்களால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
-
மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு 49 நாட்களில் 49 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு
-
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்