பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு

கோயம்பேடு:

கோயம்பேடு சந்தையில் பல மணி நேரமாக மின் தடைபட்டதால், பழச்சந்தை குளிர்பதனக் கிடங்குகளில் வைத்திருந்த பழங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டது. நேற்று மட்டும் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல், வியாபாரம் பாதிக்கப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோயம்பேடு சந்தையில், நேற்று முன்தினம் இரவு, மின்தடை ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கேபிளில் பழுது ஏற்பட்டதே இதற்கு காரணம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழுது சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு பின்னரே, மின் விநியோகம் சீரானது.

தொடர்ந்து பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால், பழச்சந்தையில் உள்ள குளிர்பதனக் கிடங்குகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டது.

அவற்றில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பழங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டதால், வியாபாரிகள் கவலையடைந்தனர்.

பழ வியாபாரிகள் கூறுகையில், ‘மின்தடை நீடித்ததால், குளிர்பதனக் கிடங்குகளில் பழங்களைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டது; விற்பனையும் பாதிக்கப்பட்டது. நேற்று மட்டும் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Advertisement