ஒரு கட்டடத்தை வேறொரு பயன்பாட்டுக்கு மாற்றலாமா? உள்ளாட்சி அனுமதி குறித்து பொறியாளர் எச்சரிக்கை

* ‘பிரேம்டு ஸ்டிரக்ச்சர்’ வகை கட்டடங்களில், வெளிப்புற சுவர்களில் உத்திரங்களுடன் இணையும் இடத்தில் ஏற்படும் சிறிய விரிசல்கள் வழியே மழைக்காலத்தில் நீர்க்கசிவு ஏற்படாமல் தடுக்க வழி உள்ளதா?

–ராஜ்மோகன், வெள்ளானப்பட்டி.

மழைக்காலத்தில் நீர்க்கசிவு குறித்து ஆய்வுசெய்யப்பட வேண்டும். வெளிப்புற சுவர்களை உத்திரங்களை முட்டி கட்டாமல் 12 மி.மீ., இடைவெளி விட்டு அந்த இடத்தில் ‘எக்ஸ்பேன்சன் பேட்’ வைத்து நிரப்பலாம். மொட்டை மாடி, கைப்பிடி சுவர்களில் இருந்து மழை நீரை தள்ளி விழுமாறு ஏற்பாடு செய்யலாம். தற்காலிகமாக மொட்டை மாடியில் ‘நியூ கோட்’டும், சுவரும் உத்திரமும் சேரும் பகுதிகளில் ‘சீல்’ மற்றும் டிரை–2 கோட் அடித்து தடுக்கலாம்.

* 1000 சதுரடியில் புதிய வீடு கட்ட இருக்கிறேன். பொதுவாக ஒரு வீட்டின் கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் அளவை எப்படி கணக்கிட்டு கட்டுவது?

–ஈஸ்வரன், வெள்ளலுார்.

வீடுகளில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து அளவீடுகள் உள்ளன. குடிநீர் தொட்டி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் என்ற கணக்கிலும், பிற தேவைகளுக்கு ஏற்பவும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, தோட்டம், நாய், கோழி போன்ற பிராணிகள் வளர்ப்பு என தேவையை கருத்தில் கொள்ள வேண்டும். நான்கு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் 4,000 லிட்டரின் தரைகீழ் தொட்டியும், 2,000 லிட்டர் மேல்நிலை தொட்டியும் போதுமானவை.

* நான் அதிக உயரத்தில் ‘பிளாட்’ ஒன்றை வாங்க சென்றேன். 10ம் மாடியில் கூரை மட்டும்தான். கான்கிரீட் போட்டிருந்தார்கள். 800 சதுரடியில் காலியாக விட்டிருந்தனர். சுற்றிலும் சுவர்களே இல்லை. கேட்டால் நம் விருப்பத்திற்கு ஏற்ப அறைகளை கான்கிரீட் பலகைகள் வைத்து முடுக்குவார்களாம். செலவை குறைக்க இப்படி செய்கிறார்களா; பாதுகாப்பானதா?

–சுந்தரி, சிங்காநல்லுார்.

நிச்சயமாக இந்த தளம் கட்டுவதற்கு உரிய அனுமதி இருக்காது. எனவே, நிச்சயமாக இதை தவிர்த்துவிடுங்கள். இத்தகைய அறைகளில் உரிய பாதுகாப்பு இருக்காது. செலவை குறைக்கவும், உள்ளாட்சி திட்ட அதிகாரிகளை ஏமாற்றவும் அல்லது கையூட்டு கொடுத்தும் இப்படி செய்கிறார்கள். இத்தகையவர்களுக்கு கண்டிப்பாக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

* கட்டுமானத்தை ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு கட்டிய பிறகு வேறொரு பயன்பாட்டுக்கும் மாற்றி அமைக்க முடியாது. உதாரணத்திற்கு அலுவலக அறையை வசிப்பிடமாக்குவதில் சிரமம் இருக்கிறது. தொழிற்சாலையை ஓட்டலாக மாற்ற முடியாது. இப்படியிருக்க சிலர் மாற்றம் செய்துகொள்ளலாம் என்கின்றனரே?

– சுதாகர், மணியகாரம்பாளையம்.

ஒரு கட்டடத்தை ஒரு பயன்பாட்டிற்காக கட்டியபிறகு வேறொரு பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது. இதனால் கூடுதல் பாரம் ஏற்படும். இது பாதுகாப்பினை குறைத்து கட்டடங்களின் பயன்பாடு காலத்தை குறைப்பதுடன் இரட்டை வெட்டிச்செலவும்கூட. எனவே, வரைபடத்தின்படி கட்டடம் இருக்க வேண்டும்.

மாற்றம் செய்வதை தவிர்ப்பது பொருளாதார இழப்பையும் தவிர்க்கும். கூடுதல் சுமையால் ஏற்படும் விபத்துகளையும் தவிர்க்க முடியும்.

* காகித பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் 200 சதுரடி பரப்பளவில் அலுவலக அறை அமைக்க உள்ளேன். தரையில் இருந்து 22 அடி உயரத்தில் கூரை வருகிறது. கூரைக்கும் தரைக்கும் நடுவே 8 அடி உயரத்தில் அலுவலக அறையும், சென்று வருவதற்கு படிக்கட்டும் அமைக்க வேண்டும். கீழே ‘பில்லர்’ இல்லாமல் பக்கச்சுவரில் இருந்து கான்கிரீட் வாயிலாக கட்டித்தருவதாக கூறுகின்றனர். அப்படி அமைக்கலாமா?

–இன்பசேகரன், உக்கடம்.

இத்தகைய கட்டுமானங்கள் பெருங்காற்றின்போதும் சிறிய நில நடுக்கத்தின்போதும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இதை தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் திட்ட அனுமதியோ, கட்டுமான ஒப்புதலோ தரப்பட வாய்ப்புகள் குறைவு. இந்த வேலையை கைவிடுவது நல்லது.

–மாரிமுத்துராஜ்,

உறுப்பினர்,

கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்கம்(கொசினா).

Advertisement