புதுச்சேரியில் பிரபல ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுமாப்பிளை படுகொலை

அரியாங்குப்பம்: புதுச்சேரியில், பிரபல ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுமாப்பிளை 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகில் உள்ள கரிக்கன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பிரவின்குமார், 27; டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்த இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணமானது.

புதுச்சேரி, வாணரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான பாம் ரவி கடந்த 2021ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான, பிரவின்குமாருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

எதிர் தரப்பில் இருந்து பிரவின்குமார் மொபைலுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்துள்ளது.

இந்நிலையில், பிரவின்குமார் கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து தவளக்குப்பம் நோக்கி நேற்று மாலை 6:10 மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 கொண்ட கும்பல் பைக்கை இடித்து கீழே தள்ளியது.

பைக்கில் இருந்து கீழே விழுந்த பிரவின்குமாரை, அந்த கும்பல் கத்தியால், அவரது தலை, முகத்தில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவின்குமார் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது.

தகவலறிந்த, தெற்கு பகுதி எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் மற்றும் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிரவின்குமாரின் உடலை மீட்டு ஆம்புலன்சில் புதுச்சேரி கதிர்காமம் மருத்துக்கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை நடந்த இடம் மெயின் ரோடு என்பதால், தவளக்குப்பம் – மடுகரை சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் அபிேஷகப்பாக்கம் பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவின்குமாரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்ற கும்பலை பிடித்தால், மேலும், பல உண்மைகள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement