பழநி மோசடி பத்திரப்பதிவு வழக்கு இருவருக்கு அக்.21 வரை சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடம் நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதான இளநிலை உதவியாளர், வழக்கறிஞரிடம் 4 நாட்கள் போலீஸ் விசாரணையை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் அக்.,21 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் உட்பட 6 பேர் மீது திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்தனர்.

தொடர்ந்து இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட பழநி சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர் சிவசங்கரி 46, போலி பத்திரம் தயாரித்து கையெழுத்திட்ட ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி வழக்கறிஞர் சிவக்குமார் 36, ஆகிய இருவரையும் அக்.7ல் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் வழக்குக்கு தேவையான கூடுதல் விபரங்களை பெற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அக்.,13 முதல் 16 வரை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதியளித்தது.

4 நாட்கள் விசாரணை முடிந்து சிவசங்கரி, சிவக்குமாரை போலீசார் நேற்று மாலை நீதிமன்றத்தில் நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை அக்.,21 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரும் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisement