குடைபிடித்தபடியே முதல்வர் ரோடு ஷோ

கோவையில் முதல்வர் விஜய் ரோடு ஷோவில், மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

முதல்வரான பிறகு விஜய் முதல் அரசு முறை பயணமாக கோவை வந்தார். விமான நிலையம் முதல் காந்திபுரம் வரை, 10 கி.மீ., ரோடு ஷோ வந்தார். வழிநெடுகிலும் பெண்கள், இளைஞர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலையத்தில் இருந்து கிருஷ்ணாம்மாள் கல்லுாரி சந்திப்பு வரை விஜய் வாகனத்தில் அமர்ந்திருந்தார். பிறகு திறந்த வாகனத்தில், பெரியார் அறிவு உலகம் வளாகம் வரை ஒரு மணி நேரம் ரோடு ஷோவாக சென்றார். த.வெ.க.,வினர் பூங்கொத்து, புகைப்படம், சால்வை, வேல் ஆகியவற்றை பரிசாக வழங்கினர். பி.என்.பாளையத்தை சேர்ந்த த.வெ.க.,வினர் விஜய்க்கு பரிசளிக்க புறா கொண்டு வந்தனர்.

நிகழ்ச்சி முடிந்து முதல்வர் விஜய் காந்திபுரத்தில் இருந்து கிளம்பும்போது மக்கள் கொட்டும் மழையில் அவரை பார்க்க காத்திருந்தனர். காந்திபுரத்தில் இருந்து அவிநாசி ரோடு எல்.ஐ.சி., சந்திப்பு வரை விஜய் குடைபிடித்தபடியே ரோடு ஷோ சென்றார்.

மாஸ்க்

விஜய் மாஸ்க்குடன் பெண்கள், குழந்தைகள் அதிகளவு திரண்டனர். புலியகுளத்தைச் சேர்ந்த இந்திராணி என்கிற துாய்மை பணியாளர் தனது, 10 மாத பேத்தியுடன் விஜயை காண வந்தார். அவர் கூறுகையில், ‘‘என்னுடைய கணவர், நான் இருவரும் துாய்மை பணியாளர்கள். நான் தற்காலிக பணியாளராக உள்ளேன். என்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முதல்வர் விஜய் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.

குழந்தையின் குடும்பத்துக்கு நம்பிக்கை கொடுத்த விஜய்

பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன் – பிரியங்கா தம்பதியின் 9 மாத குழந்தை ஆருத்ரா, தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் குணமாக, 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும். குழந்தையை காப்பாற்ற பல்வேறு தரப்பில் உதவி நாடியுள்ளனர். விஜய் ரோடு ஷோவில் நஞ்சப்பா ரோட்டில், ‘ஆருத்ராவை காப்பாற்றுங்கள்’ என்கிற வாசகத்துடன் போஸ்டரை ஏந்தினர். உடனடியாக வாகனத்தை நிறுத்த சொன்ன விஜய், குழந்தையின் குடும்பத்தினரிடம் விபரங்களை கேட்டார். குழந்தையை பார்க்க கேட்டார். குழந்தை துாரத்தில் இருந்ததால் வர முடியவில்லை. தொடர்பு எண்ணை எழுதி உதவி செய்வதாக உறுதியளித்தார்.

30 ஆண்டுகளாக அதே குணம்

கோவை விமான நிலையம் அருகே, மேட்டுப்பாளையம் ரசிகர் மன்ற நிர்வாகி ரங்கராஜ் முதல்வர் விஜயை பார்த்து கையசைத்தார். அத்தனை கூட்டத்துக்கு மத்தியிலும் விஜய் அவரை அடையாளம் கண்டு, அருகில் அழைத்து பேசினார். இதுகுறித்து ரங்கராஜ் கூறுகையில், ‘‘நான் 30 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் நகர விஜய் ரசிகர் மன்ற தலைவராக உள்ளேன். எங்கு ஷூட்டிங் நடந்தாலும் செல்வேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அருகில் கூட நெருங்க முடியவில்லை. தலைவர் அப்படியே இருக்கிறார். நான் பழைய ஆள் என்பதை அறிந்து பேசினார்.

‘‘முதல்வர் போல அல்லாமல், இப்போதும் சினிமா ஷூட்டிங் போல ‘அண்ணா’ என்றே கூப்பிட்டார். குடும்பத்தினரை பற்றி விசாரித்தார். உள்ளூர் நிர்வாகிகள் கட்சியில் என்னை ஓரம் கட்டுவதை சொன்னேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இத்தனை ஆண்டுகளாக மறக்காமல் அழைத்து பேசியதே சந்தோஷமாக இருக்கிறது,’’ என்றார்.

Advertisement