ரூ.1.90 கோடி மோசடி டில்லி வாலிபர் கைது

ஆவடி: நிர்வாக இயக்குநர் பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி, அம்பத்துார் நிறுவனத்திடம், 1.90 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், டில்லியைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றுபவர் சவுந்தர்ராஜன். இவரது மொபைல் போனுக்கு, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பெயரில் கடந்த ஆகஸ்ட் மாதம் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, சவுந்தர்ராஜன் 1.90 கோடி ரூபாயை அனுப்பியுள்ளார்.

பின், அந்த குறுஞ்செய்தி மோசடி நபர்களால் அனுப்பப்பட்டது என்பதை அறிந்த அவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மோசடி நபர்களுக்கு வங்கிக் கணக்கு கொடுத்து உதவிய டில்லியைச் சேர்ந்த தீபக் மீனா, 27, என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement