அண்ணாமலை பல்கலைக்கு வாரி வழங்கப்படும் நிதி; மற்றவற்றை அரசு கண்டு கொள்ளாததால் அவலம்
சென்னை: 'அரசு ஏற்ற அண்ணாமலை பல்கலைக்கு, கடந்த 14 ஆண்டுகளில், 5,332 கோடி ரூபாய், தமிழக அரசு மானியமாக வழங்கியுள்ள நிலையில், கல்வியில் சிறந்து விளங்கும் மாநில பல்கலைகள், நிதி நெருக்கடியில் தள்ளாடுவது, கல்வியாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில், 1929ல், அண்ணாமலை பல்கலை தொடங்கப்பட்டது. இப்பல்கலையில், 1998 முதல் 2008 வரை, தமிழக அரசின் சட்டம் மற்றும் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல், அதிக அளவில் பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதனால், பல்கலை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. நிர்வாக பணிகள் முடங்கின.
சிறப்பு சட்டம்
இதையடுத்து, 2013ல், அண்ணாமலை பல்கலையை தமிழக அரசே ஏற்றது. இதற்காக, சட்டசபையில் சிறப்பு சட்டமும் இயற்றப்பட்டது.
அண்ணாமலை பல்கலையை அரசு கையகப்படுத்திய, 2013 - 14ம் கல்வியாண்டு முதல், 2026 - 27ம் கல்வியாண்டின் ஜூன் மாதம் வரை, 5,332.32 கோடி ரூபாய், தமிழக அரசின் சார்பில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டில் மட்டும், 525 கோடி ரூபாய், அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில், பல்கலைக்கு வழங்கப்பட்ட, அதிகபட்ச மானியத்தொகை இதுவே.
அதேநேரத்தில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், சென்னை பல்கலைக்கு, நடப்பாண்டு, 52 கோடி ரூபாய், மதுரை காமராஜர் பல்கலைக்கு, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பல்கலைகளுக்கு, 20 கோடி ரூபாய் வரை அரசு மானியம் வழங்கி உள்ளது.
நிதி நெருக்கடியால், மாநில அரசின் பல பல்கலைகள் தள்ளாடும் நிலையில், கையகப்படுத்தப்பட்ட ஒரு பல்கலைக்கு மட்டும், மாநில அரசு ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல் மானியமாக வழங்கி வருவது, கல்வியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வருவாய் பாதிப்பு
இதுகுறித்து, முன்னாள் துணை வேந்தர்கள் கூறியதாவது: அண்ணாமலை பல்கலையில், அதிகப்படியாக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதே, அதன் நிர்வாக சீர்கேடுகளுக்கு காரணம். தற்போது, இப்பல்கலையில், தொலைதுார கல்வி மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால், வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆசிரியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல்கலை வளாக பராமரிப்பு போன்றவற்றுக்காக மட்டுமே, மாநில அரசு மாதத்திற்கு, 50 கோடி ரூபாய் வரை செலவிட்டு வருகிறது.10 ஆண்டுகளாக, தமிழக அரசு மானியம் வழங்கி வரும் நிலையில், பல்கலையின் தரத்தில் முன்னேற்றம் இல்லை.
இன்றளவும் நிதி சிக்கல்கள் நீடித்து வருகின்றன. அதேநேரம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும், நிதி நெருக்கடியில் இருக்கும், மாநில அரசின் பல்கலைகளுக்கு, தமிழக அரசு குறைந்த அளவே மானியம் வழங்குகிறது.
அண்ணாமலை பல்கலை நிர்வாக கட்டமைப்பை தமிழக அரசு சீரமைக்க வேண்டும். பல்கலையின் செலவுகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்