ரோடுகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்தில் சிரமம்: திணறும் காரியாபட்டி வாகன ஓட்டிகள்

காரியாபட்டி: காரியாபட்டியில் ஒன்றிய அலுவலக ரோடு, அருப்புக்கோட்டை மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளால் நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

காரியாபட்டியில் பஸ் ஸ்டாண்ட் ஒட்டி ஒன்றிய அலுவலகம், எம். எல். ஏ., அலுவலகம், உழவர் சந்தை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. ரோட்டில் டூவீலர்கள், நடமாடும் கடைகள், கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு என எப்போதும் போக்குவரத்துக்கு நெருக்கடி இருந்து வருகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டின் நடுவில் வாகனங்களை நிறுத்தி பொருட்கள் வாங்குவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.

அதேபோல் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் பஸ்கள் நின்று செல்ல பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. பயணிகளைத் தவிர மற்றவர்கள் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளதால் பயணிகள் மழை, வெயிலுக்கு ஒதுங்க முடியவில்லை . அங்குள்ள இருக்கைகள் முற்றிலும் சேதம் அடைந்து ஆட்கள் அமர முடியாத நிலை உள்ளது. கூட்டுறவு வங்கியில் நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத கட்டடம் இடிந்து விழும் ஆபத்தான சூழ்நிலை இருப்பதால் எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி கூட்டுறவுக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிரந்தரமாக அகற்ற வேண்டும்

திருமலை, தனியார் ஊழியர்.

ஒன்றிய அலுவலக ரோட்டில் அதிகாரிகள், எம்.எல்.ஏ., உழவர் சந்தைக்கு காய்கறி வாங்குபவர்கள் என எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். அதிக வாகனங்கள் சென்று வரும். வெளியூர்களுக்கு செல்பவர்கள் ரோட்டில் டூவீலர்களை நிறுத்தி விட்டு செல்வதால் இடையூறு ஏற்படுகிறது. தள்ளுவண்டி கடைகள், கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு என போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதனை நிரந்தரமாக அகற்ற வேண்டும் .

மழைக்கு ஒதுங்க முடியவில்லை

பாலமுருகன் , தனியார் ஊழியர்.

ரூ. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட நிழற்குடை சரிவர பராமரிக்காமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. தள்ளுவண்டி கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் மழை, வெயிலுக்கு ஒதுங்கி நிற்க முடியவில்லை. அங்குள்ள இருக்கைகள் முற்றிலும் சேதம் அடைந்து காயம் ஏற்படுத்தும் அளவிற்கு படுமோசமாக இருக்கிறது. முற்ற்றும் அகற்றி, அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து அச்சம்

சுரேஷ், தனியார் ஊழியர்.

கூட்டுறவு சங்க கட்டடம் படுமோசமாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அக் கட்டடம் மழைக்கு இடிந்து விழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. அருகில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். விபத்திற்கு முன் கட்டடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement