அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தண்டவாளத்தை கடந்து செல்லுங்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்

1

மதுரை: மதுரை கோட்டத்தில் ரயில்கள் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுவதால் பாதசாரிகள், கால்நடை வளர்ப்போர் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தண்டவாளத்தை கவனமாக கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிதியாண்டில் செப்., வரை கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்துகளில் 116 பாதசாரிகள், 97 கால்நடைகள் என 213 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல்வேறு ரயில்கள் மொத்தமாக சுமார் 14 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. குறிப்பாக, திருச்சி - மதுரை - திருநெல்வேலி, விருதுநகர் - கொல்லம் வழித்தடத்தில் பாதசாரிகளும், திருச்சி - மானாமதுரை வழித்தடத்தில் கால்நடைகளும் விபத்துகளில் அதிகமாக சிக்கின. விபத்துகளை தவிர்க்க அக்.15 வரை அனுமதி இல்லாத பகுதிகளில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3341 பேருக்கு ரூ.17.10 லட்சம் வரை ரயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்தனர்.

ரயில்வே நிர்வாகத்தினர் கூறுகையில், ''விபத்துகளை தவிர்க்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மின்சார ரயில்கள் இயங்கும் சத்தம் குறைவு என்பதால் தண்டவாளத்தை பாதசாரிகள் கவனமாக கடக்க வேண்டும். இயர்போன்கள் பயன்படுத்தி தண்டவாளத்தில் நடந்து செல்ல கூடாது. கால்நடைகள் தண்டவாளம் அருகே வராமல் அதன் உரிமையாளர்கள் பாதுகாக்க வேண்டும். அனுமதி இல்லாத பகுதிகளில் தண்டவாளத்தை கடப்போர் குறித்து அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிக்கோ, கட்டணமில்லா தொலைபேசி எண்களான 139 அல்லது 182 ஆகியவற்றுக்கோ தகவல் தெரிவிக்கலாம்'' என்றனர்.

Advertisement