நாட்டை விட்டு வெளியேற தடை கோரி பாலிவுட் நடிகர் அமீர்கான் சகோதரர் மனு

மும்பை: நாட்டை விட்டு வெளியேறுமாறு மும்பை போலீசார் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பாலிவுட் நடிகர் அமீர் கானின் சகோதரரும், நடிகருமான இம்ரான் கான், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, மும்பையில் கடந்த 10ம் தேதி கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில், பாலிவுட் நடிகர் அமீர் கானின் சகோதரரும், நடிகருமான இம்ரான் கானும் பங்கேற்றார். எந்த அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தாமல், தனிப்பட்ட முறையில் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.

அவர் இந்திய குடியுரிமை பெறாதவர் என்பதால், வெளிநாட்டவர் என்ற முறையில் எந்த போராட்டத்திலும் பங்கேற்க முடியாது என்றும், அந்த சட்டத்தை மீறி அவர் பங்கேற்றதால் மும்பை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்தனர்.

மேலும், வரும் அக்., 28க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எப்.ஆர்.ஆர்.ஓ., எனப்படும், வெளிநாட்டவர்கள் பிராந்திய பதிவு அலுவலகம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து இம்ரான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என எப்.ஆர்.ஆர்.ஓ., பிறப்பித்த உத்தரவு தன்னிச்சையானது. அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது. காரணமோ, விளக்கமோ கேட்காமல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

முன்னதாக குடியுரிமை பற்றி பேசிய இம்ரான் கான், ‘நான் இந்திய குடியுரிமை பெற முயற்சி செய்து வருகிறேன். விரைவில் குடியுரிமை கிடைத்துவிடும் என நம்புகிறேன். நாட்டுக்காக சேவையாற்றுவது என் கடமை. எனக்கு ஓட்டுரிமை இல்லை. எனினும், தேர்தல் முறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன்’ என்றார்.

Advertisement