கடம்பத்துார் நெடுஞ்சாலையோரம் டாஸ்மாக் கடை மரங்களின் நிழலை மதுக்கூடமாக்கிய ‘குடி’மகன்கள்: அச்சத்தில் பெண்கள், வாகன ஓட்டிகள்
கடம்பத்துார்: சத்தரை பகுதியில், கடம்பத்துார் – பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே, மரங்களின் நிழலை மதுக்கூடமாக்கிய ‘குடி’மகன்களால், அவ்வழியே செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் பகுதியில் செயல்பட்ட இரு டாஸ்மாக் கடைகள், தமிழக வெற்றிக் கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மூடப்பட்டன.
இதையடுத்து, பேரம்பாக்கம் – கடம்பத்துார் நெடுஞ்சாலையோரம், சத்தரை பகுதியில் தனியார் கட்டடத்தில், தற்போது டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இங்கு, மதுக்கூடம் நடத்த அனுமதி கிடைக்காததால், இங்கு வரும் ‘குடி’மகன்கள் நெடுஞ்சாலையோரம் உள்ள மரங்களின் நிழலில் கூட்டமாக அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.
இதனால், இந்த நெடுஞ்சாலை வழியே, இருசக்கர வாகனங்களில் கடக்கும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் தனியே செல்லும் பெண்கள் இப்பகுதியை கடக்கவே அச்சப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இவ்வழியே குழந்தைகளுடன் நடந்து செல்லும் அப்பகுதி பெண்களும், அச்சத்தில் சென்று வருகின்றனர்.
சில நேரங்களில், ‘குடி’மகன்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், அடிக்கடி அப்பகுதியில் தகராறு ஏற்பட்டு வருகிறது.
மேலும், இவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் உட்பட சிறுவர்களும், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை ஏற்படுவதாக, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விடுமுறை நாட்களில், இப்பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனையும் அமோகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலையோரம், காலி மைதானங்களிலும், மரங்களின் நிழலிலும் மது அருந்தும் ‘குடி’மகன்களை, சம்பந்தப்பட்ட காவல் துறையினரும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு, கடம்பத்துார் – பேரம்பாக்கம் நெடுஞ்சாலையோரம் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெண்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.