தனி இயக்குனர்களின் நடத்தை குறித்து விசாரணை போக்குவரத்து கழகம் முடிவு

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நியமனம் செய்துள்ள தனி இயக்குனர்களின் நன்னடத்தை மற்றும் குற்ற பின்னணி குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தமுள்ள, எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், தலா இரண்டு தனி இயக்குனர்கள் நியமனம் செய்வது வழக்கம். இவர்கள், அரசு போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்குவர்.

அந்த வகையில், மொத்தமுள்ள 16 தனி இயக்குனர்களில், 11 பேர் தற்போது பணியில் இருக்கின்றனர். மீதமுள்ள ஐந்து பேரை நியமனம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவர்கள், அரசு துறைகளை சாராதவர்கள் என்றால், சி.ஏ., அல்லது நிறுவன செயலர், பி.எல்., – எல்.எல்.பி., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு எழுத தேவையில்லை.

ஆனால், பிற வல்லுனர்கள் என்றால், தேர்வு எழுத வேண்டும். மேலும், விண்ணப்பவர்களின் வயது 45 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். இறுதியாக, கல்வி, தகுதி, அனுபவம் மற்றும் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டியலை தயார் செய்து, தமிழக அரசு தனி இயக்குனர்களை நியமனம் செய்வது வழக்கமாக இருக்கிறது.

இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நியமனம் செய்துள்ள மற்றும் புதியதாக நியமனம் செய்ய உள்ள தனி இயக்குனர்களின் நன்னடத்தை மற்றும் குற்ற பின்னணி குறித்து, முதல் முறையாக, போலீசார் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement