துபாய் பறந்தார் உதயநிதி பழைய வீடியோவை வெளியிட்டது தி.மு.க.,

சென்னை: வெள்ள பாதிப்பை உதயநிதி ஆய்வு செய்வது போல பழைய வீடியோவை, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமானத்தில் துபாய் சென்று விட்டார்.

சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள உதயநிதி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். முந்தைய தி.மு.க., ஆட்சியில் துணை முதல்வராக இருந்த போது, வெள்ள பாதிப்பு நேரத்தில், நள்ளிரவு நேரங்களிலும் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நேரத்தில், முந்தைய ஆட்சியில், உதயநிதி மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த வீடியோக்களை, சமூக வலைதளங்களில் தி.மு.க.,வினர் பரப்பினர். அதை தங்களது மொபைல் போன்களில், ‘ஸ்டேட்டஸ்’ ஆக வைக்கும்படி, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தரப்பிலும் கூறப்பட்டது.

அதேநேரத்தில், வெள்ள பாதிப்புகள் எதையும் ஆய்வு செய்யாமல், உதயநிதி நேற்று துபாய் போய் விட்டார். விமான நிலையத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு, அவர் பதில் அளிக்கவில்லை.

Advertisement