வைகை அணையில் பராமரிப்பு இல்லாத ரவுண்டானா பூங்கா

ஆண்டிபட்டி: வைகை அணை நுழைவுப் பகுதியில் பெரிய பாலம் முன்பு அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா பூங்கா பராமரிப்பின்றி சேதம் அடைந்து வருகிறது.

வைகை அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகளை கடந்துள்ளது. வைகை அணை கட்டுமானத்தின்போது அணையின் வலது, இடது கரைகளில் 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டன. வைகை அணையின் நுழைவுப் பகுதியில் அழகு சேர்க்கும் விதமாக பெரியகுளம், ஆண்டிபட்டி, க.விலக்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் பெரிய பாலத்தின் இருபுறமும் ரவுண்டானா பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடது கரையில் உள்ள ரவுண்டான பூங்கா ஏற்கனவே பராமரிப்பின்றி சிதிலமடைந்து விட்டது. வலது கரை ரவுண்டானா பூங்காவில் அசோக சக்கரமும் நான்கு சிங்கங்களும் கொண்ட உயரமான தூண் அனைவரையும் வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. உயரமான தூணைச் சுற்றிலும் வண்ண மலர்கள் கொண்ட பூச்செடிகளுடன் கம்பி வேலி அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. ரவுண்டானா பூங்காவை சுற்றியுள்ள கம்பி வேலி சேதமடைந்துள்ளது. பூங்காவில் பூச்செடிகளும், புல் தரையும் பராமரிக்கப்படுவதில்லை. வைகை அணையை கடந்து செல்லும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக இருந்த ரவுண்டானா பூங்காக்களை பராமரிக்க வைகை அணை நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement