சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த பவித்திரம் கிராமத்தில், நுாற்றாண்டு பழமையான அச்சப்பன் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமியன்று விழா நடக்கிறது.

இதில் 'பேய் விரட்டும்' விநோத நிகழ்ச்சி நடப்பது விசேஷம். குழந்தை வரம் வேண்டும் பெண்கள், திருமணமாகாத ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர்.

அவ்வாறு பங்கேற்கும் பெண்கள், கோவில் வளாகத்தில் கைகளை மேலே கூப்பியபடி மண்டியிட்டு அமர்ந்திருப்பர். அவர்களை கோவில் பூசாரியும், கோமாளி வேடமிட்ட நபரும் சாட்டையால் அடித்தபடி செல்வது வழக்கம். சாட்டையடி வாங்கினால் தீய சக்தி வெளியேறிவிடும். குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

நேற்று நடந்த விழாவில் நுாற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் சாட்டையடி வாங்கினர். அதை தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement