பிரிட்டிஷ் கால குதிரை சாலையை சீரமைத்தால் 46 கி.மீ., குறையும்: மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
நாமக்கல்:'பிரிட்டிஷ்
காலத்தில் பயன்படுத்தப்பட்ட குதிரை சாலையை சீரமைத்தால், மாவட்ட
தலைநகரை, 34 கி.மீ., துாரத்தில் எட்டிவிடலாம். 46 கி.மீ., பயண துாரம்
குறையும் என்பதால், இவற்றை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற
வேண்டும்' என, கொல்லிமலை மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்
மாவட்டம், கொல்லிமலை தாலுகா, சேலுார் நாடு தின்னனுார் நாடு, தேவனுார்
நாடு பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 15,000க்கும்
அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து சமவெளி
பகுதிக்கு செல்ல, நான்கு மணி நேரம் பயணம் செய்யும் நிலை உள்ளது.
குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதனால்,
மாவட்ட தலைநகர் வருவதற்கு, 90 கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டிய
நிலைக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆபத்து, விபத்து,
பிரசவம், மாரடைப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக,
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மரணம், பிரசவம் நிகழ்வது
வாடிக்கையான ஒன்று. மேலும், விவசாயிகள், விளை பொருட்களை
சந்தைப்படுத்துவதற்கும், நீண்ட துாரம் பயணிக்கும் அவல நிலை உள்ளது.
இதனால், மிகுந்த பொருள் மற்றும் நேர விரயம் ஏற்படுகிறது.
குறிப்பாக,
சேலுார் நாடு மணப்பாறை சந்தையில் இருந்து, மேற்படி குதிரை சாலைக்கு
வருவதற்கு, இரண்டு கி.மீ., துாரமே உள்ளது. தற்போது, நீண்ட துாரம்
பயணித்து, மேற்படி சந்தைக்கு வியாபாரிகள் வராததால், விவசாயிகள்
தங்கள் விளை பொருட்களை சொற்ப விலைக்கு கொடுக்க வேண்டிய நிலை
ஏற்படுகிறது.
செங்கல், ஜல்லி, கம்பி, சிமென்ட் போன்ற கட்டுமான
பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, தற்போது உள்ள
சாலைகளில் கொண்டு செல்வதால், அதிக வாடகை செலவழிக்க நேரிடுகிறது.
மாற்று பாதையான சேலுார் நாடு குழிப்பட்டி முதல், எரும்பட்டி வழியாக
செல்லும் பழங்குடியின மக்கள், பலதலைமுறைகளாக பயன்படுத்தி வரும்
குதிரை சாலையை, தார் சாலையாக மாற்றினால், கட்டுமானம் உள்ளிட்ட
அத்தியவாசிய பொருட்களை கொண்டு சென்றால், பாதி அளவாக குறையும்.
குறிப்பாக, அரப்பளீஸ்வரர் கோவில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு,
குளிப்பட்டி குதிரை சாலையிலிருந்து, ஏழு கி.மீ., துாரமே.
இதை
தடுப்பதற்கு, சேலுார் நாடு குழிப்பட்டி முதல், எருமப்பட்டி வழியாக,
நாமக்கல் வருவதற்கு, பிரிட்டிஷர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த
குதிரை சாலையை மீண்டும் பயன்படுத்துவதால், மாவட்ட தலைநகரை, 34
கி.மீ., துாரத்தில் எட்டிவிடலாம். இதன் மூலம், 46 கி.மீ., துாரம் பயணம்
குறைவதுடன், பொருள் சேதம், நேர விரயம் சேமிக்கப்படும்.
'கொல்லிமலை
பழங்குடியின மக்கள், பல தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் குதிரை
சாலையை, தார்ச்சாலையாக புனரமைத்து கொடுக்க, போர்க்கால
அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,
கோரிக்கை எழுந்துள்ளது.